Published : 30 Jun 2023 11:55 AM
Last Updated : 30 Jun 2023 11:55 AM

மாசடைந்த ஓசூர் கெலவரப்பள்ளி அணை நீரால் விளை நிலங்களில் மண் வளம் பாதிக்கும் அபாயம்

ஓசூர்: கழிவுநீர் கலப்பால் மாசடைந்துள்ள ஓசூர் கெலவரப்பள்ளி அணை நீரைப் பாசனத்துக்குப் பயன்படுத்தினால் மண் வளம் பாதிப்பு மற்றும் காய்கறிகள், கீரைகள் நிறம் மாறுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் உள்ள தொழிற்சாலை கழிவுநீர் மற்றும் குடியிருப்புப் பகுதியிலிருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல், தென்பெண்ணை ஆற்றில் நேரடியாகக் கலக்கிறது. இதனால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீர் மாசடைந்துள்ளது.

அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் நீர் மூலம் கிருஷ்ணகிரி அருகே உள்ள எண்ணேகொள்புதூர் வரை ஆற்றையொட்டியுள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இப்பகுதியில் காய்கறி மற்றும் மலர் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், கெலவரப்பள்ளி அணையின் 7 மதகுகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக அணை நீரை படிப்படியாகக் குறைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவு நீர் திறக்கப்பட்டுள்ளது. மாசடைந்துள்ள அணை நீர் ஆற்றில் நுரை பொங்கத் துர்நாற்றத்துடன் செல்கிறது. இந்நிலையில், ஆற்று நீரைப் பாசனத்துக்கு பயன்படுத்த முடியாத அளவில் மாசு அடைந்திருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

மேலும், இந்நீரைப் பாசனத்துக்குப் பயன்படுத்தியதால், உத்தனப்பள்ளி அருகே கனஜூர் கிராம விளை நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள புதினா, கொத்தமல்லி, முள்ளங்கி, தக்காளி, முட்டைகோஸ், காலிஃபிளவர் உள்ளிட்ட பயிர்களில் காய்கறிகள், கீரை, காலிஃபிளவர் ஆகியவற்றின் நிறம் மாறியுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: கெலவரப்பள்ளி அணை நீரை நம்பி எண்ணேகொள்புதூர் வரை ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் சாகுபடி நடைபெறுகிறது. கெலவரப்பள்ளி அணை நீர் மாசடைந்த நிலையில் நீரைப் பாசனத்துக்குப் பயன்படுத்தினால் நோய் தாக்கம் ஏற்படுகிறது. தற்போது, அதிக அளவில் திறந்துவிடப்பட்ட நீரைப் பாசனத்துக்குப் பயன்படுத்தியபோது, காய்கறிகளின் நிறம் மாறியது.

மேலும், வயல்வெளி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், மண் வளம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அணை நீரை ஆய்வு செய்து, பாசனத்துக்கு நீரைப் பயன்படுத்தலாமா என்பது குறித்து நீர்வளத்துறை மற்றும் வேளாண், தோட்டக்கலைத் துறையினர் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x