Published : 22 Jun 2023 07:35 PM
Last Updated : 22 Jun 2023 07:35 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள 5 ஏரிகள் சதுப்பு நிலங்களாக விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. ஏரிகளின் பாதுகாப்பு மற்றும் நிலையான சுற்றுச்சூழல் பயன்பாட்டுக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
புதுச்சேரியில் 84 ஏரிகள் மற்றும் சிறு குளங்கள், தாங்கல் உள்ளிட்ட ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. இவற்றில் பல ஆக்கிரமிப்புகளால் காணாமல் போயின. மீதம் இருப்பவைகளில் ஒரு சில ஆக்கிரமிப்பு பிடியில் உள்ளன. இருக்கும் நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில், புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக 5 ஏரிகள் சதுப்பு நிலங்களாக 2017-ம் ஆண்டு பாதுகாப்பு மற்றும் மேலாண்மை அரசு விதிகளின் கீழ் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த நடவடிக்கையானது நீர்நிலைகளின் பாதுகாப்பு, நிலையான பயன்பாட்டுக்கு உதவும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமான சில நீர்நிலைகளை சதுப்பு நிலங்களாக அறிவிக்க மத்திய அரசின் விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து புதுச்சேரி யூனியன் பிரதேச சதுப்பு நிலங்கள் ஆணையம், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இதற்கான செயல்முறையில் தீவிரம் காட்டியுள்ளது. அதன் படி ஊசுடு, பாகூர், வதானூர், காட்டேரிக்குப்பம், கோர்காடு ஆகிய ஏரிகள் முதல் கட்டமாக அடையாளம் காணப்பட்ட சதுப்பு நிலங்களுக்கான நீர்நிலைகளாக கண்டறியப்பட்டுள்ளன.
அவற்றில், 800 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஊசுடு ஏரியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியால் நிர்வகிக்கப்படும் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. விரைவில் அவை சதுப்பு நிலங்களாக அறிவிக்கப்பட உள்ளது. இவ்வாறு அறிவிக்கப்பட்ட பின் சதுப்பு நிலங்களாக அறிவிக்கப்படும் நீர்நிலைகளின் நீரின் தரம், ஆக்கிரமிப்புகள், உயிரியல் ஆக்ஸிஜன் தேவை, ஓராண்டில் வந்து போகும் பறவைகளின் எண்ணிக்கை, மேலாண்மைத் திட்டம் மற்றும் உள்ளூர் மக்களுக்கான நன்மை உள்ளிட்டவைகள் மீது மதிப்பீடு செய்யப்படும்.
இதுதொடர்பாக புதுச்சேரி வன பாதுகாவலர் வஞ்சுலவள்ளி கூறுகையில், “ஒரு பகுதியை சதுப்பு நிலமாக முறையாக அறிவித்த பின், அதன் நிலப் பயன்பாடு மாறாது. இந்த நடவடிக்கைக்குப் பிறகு ஆக்கிரமிப்பு அல்லது கட்டுமானத்தை அரசு ஒரு போதும் அனுமதிக்காது. இருப்பினும் பாரம்பரிய மீன்பிடி நடவடிக்கைகளுக்கு மட்டும் இப்பகுதியில் அனுமதி அளிக்கப்படும். தேவைப்பட்டால் உள்ளூர் மக்களுக்கு ஏரியின் தண்ணீரை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும்.
சதுப்பு நிலங்களாக ஏரிகள் அறிவிக்கப்பட்டதும் இதுகுறித்த விதிகள் அமல்படுத்தப்பட்டு, பாதுகாப்பு மற்றும் நியாயமான பயன்பாட்டுக்கான உத்திகள் வகுக்கப்படும். புதுச்சேரி யூனியன் பிரதேச சதுப்பு நில ஆணையம் இரண்டாம் கட்டமாக மேலும் சில நீர்நிலைகளை சதுப்பு நிலங்களாக அறிவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்திய வனவிலங்கு நிறுவனம், டேராடூன் மற்றும் கோயம்புத்தூர் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் இணைந்து இரண்டாம் கட்டத்தில் அறிவிக்கப்படும் ஈர நிலங்களுக்கான ஆவணங்கள் மற்றும் சுகாதார அட்டவணைகளைத் தயாரிக்கும்” என்று தெரிவித்தார்.
புதுச்சேரி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் முத்தம்மா இது பற்றி கூறும்போது, “இந்த அறிவிப்பு நீர் நிலைகளில் உள்ள பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கு உதவும். நீர் நிலைகள் பராமரிக்கப்படும் போது ஆக்கிரமிப்புகளுக்கு தடை விதிக்கப்படும். பல நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டாலும், இது மக்களுக்கான கட்டுப்பாடான நடவடிக்கை அல்ல.
இது வளர்ச்சி சார்ந்த மற்றும் பழமையான அணுகு முறையாகும். இந்த ஏரிகள் சதுப்பு நில பகுதிகளாக இன்னும் ஒரு மாதத்தில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT