Published : 22 Jun 2023 04:17 PM
Last Updated : 22 Jun 2023 04:17 PM
கோவை: சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஓபன் எண்ட் மறுசுழற்சி நூற்பாலைகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. பிரதான நூற்பாலைகளில் இருந்து பெறப்படும் கழிவுப் பஞ்சு, ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து பெறப்படும் பனியன் கட்டிங் வேஸ்ட் மற்றும் பயன்படுத்தப்பட்ட ‘பெட் பாட்டில்’ எனப்படும் தண்ணீர் பாட்டில்களை மறுசுழற்சி செய்து நூல் தயாரித்து பல்வேறு ஜவுளிப் பொருட்களை உற்பத்தி செய்யும் பணி ஓபன் எண்ட் மறு சுழற்சி நூற்பாலைகளில் மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தில் 600-க்கும் மேற்பட்ட ஓ.இ. மில்கள் செயல்படுகின்றன. தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களை சேர்ந்த பல லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். தினமும் சராசரியாக 40 லட்சம் கிலோ நூல் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது சந்தை மந்தமாக உள்ளதால் தினமும் 30 லட்சம் கிலோவாக நூல் உற்பத்தி குறைந்துள்ளது.
இத்தகைய நூற்பாலைகளில் உற்பத்தி செய்யப்படும் நூலைக் கொண்டு ஜீன்ஸ், படுக்கை விரிப்புகள், சமையலறையில் பயன்படுத்தப்படும் துணிகள் உள்ளிட்ட பல்வேறு ஜவுளிப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
மறு சுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பின் (ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால் கூறியதாவது: ஓபன் எண்ட் மறுசுழற்சி நூற்பாலைத் துறையில் தேசிய அளவில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. இந்தியா முழுவதும் 5.10 கோடி ஸ்பின்டில்கள் (நூற்பு இயந்திரம்) உள்ள நிலையில் இவற்றில் 47 சதவீதம் தமிழகத்தில் உள்ளன. அதேபோல, தேசிய அளவில் 37 லட்சம் ரோட்டார்கள் (இயந்திரம்) உள்ள நிலையில், 14.5 லட்சம் ரோட்டார்கள் தமிழகத்தில் உள்ளன.
இது தவிர, தமிழகத்தில் மட்டும் 5.7 லட்சம் விசைத்தறிகளும் (பவர் லூம்), 2.3 லட்சம் தானியங்கி தறிகளும் (ஆட்டோ லூம்) உள்ளன. நூற்பாலைகளில் இருந்து பெறப்படும் கழிவுப் பஞ்சு, ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து பெறப்படும் பனியன் கட்டிங் வேஸ்ட் மற்றும் பயன்படுத்தப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் (பெட் பாட்டில்) உள்ளிட்ட கழிவுப் பொருட்களை மறு சுழற்சி முறையில் நூலாக மாற்றி மீண்டும் பல்வேறு ஜவுளிப் பொருட்களை தயாரிக்க ஓபன் எண்ட் மறுசுழற்சி நூற்பாலைகள் உதவி வருகின்றன.
கழிவுகளை மறுசுழற்சி செய்து சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகித்து வரும் ஓபன் எண்ட் நூற்பாலைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினால் ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் ஜவுளிப்பொருட்கள் கிடைக்க உதவும், என்றார்.
தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கத்தின் (ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறும்போது,‘‘பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ள போதும் ஓபன் எண்ட் நூற்பாலைகளில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலப் பொருளான கழிவுப் பஞ்சு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது தொழில் வளர்ச்சியை பாதித்துள்ளது.
மறு சுழற்சிக்கு உதவும் இத்துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து நூற்பாலை நிர்வாகத்தினர் நியாயமான விலையில் கழிவுப் பஞ்சு விற்பனை செய்ய முன்வர வேண்டும். மத்திய, மாநில அரசுகளும் இத்துறைக்கு தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT