Published : 17 Jun 2023 06:31 AM
Last Updated : 17 Jun 2023 06:31 AM
கிருஷ்ணகிரி: ஆக்கிரமிப்பு, சாக்கடை கழிவுநீர் கலப்பு மற்றும் பிளாஸ்டிக் கழிவு கொட்டப்பட்டு மாசடைந்து பாழ்பட்டுள்ள பர்கூர் பாம்பாறு கால்வாயை மீட்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் குப்பம் வனப்பகுதியில் பெய்யும் மழையின்போது மழை நீர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓதிக்குப்பம் ஏரிக்கு வந்தடைகிறது. இந்த ஏரி 50 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
ஏரி நிரம்பி வெளியேறும் உபரிநீர் பாம்பாறு கால்வாய் வழியாக சென்று பர்கூர், மத்தூர், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய பகுதி வழியாக சென்று பாம்பாறு அணையில் கலக்கும்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் வரை போதிய மழையின்மையால் பாம்பாறு கால்வாய் நீர்வரத்தின்றி இருந்தது.
இதனால், பாம்பாற்றில் மணல் கொள்ளை, ஆக்கிரமிப்புகள் அதிகரித்து ஆற்றின் பரப்பு சுருங்க தொடங்கியது. இவை ஒருபுறம் இருக்க கால்வாய் செல்லும் பகுதியில் உள்ள ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளின் சாக்கடை கழிவுநீர் கால்வாயில் கலந்து கழிவுநீர் செல்லும் ஓடையாக மாறியது.
இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக ஆந்திர மாநில எல்லையில் பெய்த கனமழையால் ஓதிகுப்பம் ஏரி நிரம்பி, மீண்டும் பாம்பாறு கால்வாயில் நீர் பெருக்கெடுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், ஆக்கிரமிப்பு, கழிவுநீர் கலப்பு உள்ளிட்ட காரணங்களால் கால்வாயில் மழை நீர் செல்வதில் தேக்க நிலை ஏற்படுவதோடு, கழிவால் நீர் மாசடைந்து வருகிறது.
எனவே, பாம்பாறு கால்வாயை மீட்க வேண்டும் என விவசாயிகளிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பர்கூரைச் சேர்ந்த முருகன் கூறியதாவது:
ஓதிகுப்பம் ஏரி நிரம்பி சிந்தகம்பள்ளி, காரகுப்பம், பர்கூர் வழியாக மத்தூர் பெனுகொண்டாபுரம் ஏரியைச் சென்றடைகிறது. பின்னர் அங்கிருந்து ஊத்தங்கரை பாம்பாறு அணையில் கலக்கிறது. 40 கிமீ தூரம் உள்ள பாம்பாறு கால்வாய் மூலம் 35 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயன் பெற்று வந்தன.
தற்போது, ஆக்கிரமிப்பு, சாக்கடை கழிவுநீர் கலப்பு மற்றும் பிளாஸ்டிக் கழிவு கால்வாயில் கொட்டப்படுவதால், நீர்வழிப்பாதையின் மொத்த அடையாளமும் மாறியதோடு, பாசனமும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஓதிகுப்பம் ஏரி முதல் பாம்பாறு வரையான கால்வாய் பகுதியை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
மேலும், கழிவுகள் கொட்டுவதையும், சாக்கடை கழிவுநீர் கலப்பதையும் உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து தடுத்து மீண்டும் பாம்பாறு அணைக்குத் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் மீண்டும் இப்பகுதியில் விவசாயம் புத்துயிர் பெற வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT