Last Updated : 17 Jun, 2023 06:41 AM

 

Published : 17 Jun 2023 06:41 AM
Last Updated : 17 Jun 2023 06:41 AM

நோய் தாக்குதல், மண் வளத்தை அறிய ப.வேலூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படுமா?

கோப்புப் படம்

நாமக்கல்: நோய் தாக்குதல், மண் வளத்தை அறிய ப.வேலூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்ற காவிரி கரையோர விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட பரமத்தி, ப.வேலூர், பாண்டமங்கலம், பொத்தனுார், குப்புச்சிப்பாளையம், பொய்யேரி, நன்செய் இடையாறு உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்கள் காவிரி கரையோரம் உள்ளன.

இங்கு வெற்றிலை சாகுபடி பிரதானத் தொழிலாக இருந்து வருகிறது. குறிப்பாக 800 ஏக்கர் பரப்பளவில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

மேலும், கற்பூரம், வெள்ளை வெற்றிலை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. காவிரி நீரை ஆதாரமாகக் கொண்டுள்ளதால், மற்ற மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் வெற்றிலையை விட இப்பகுதி வெற்றிலைக்கு சந்தையில் வரவேற்பு அதிகம்.

இங்கு அறுவடை செய்யப்படும் வெற்றிலை ப.வேலூரில் உள்ள மண்டிகளுக்குக் கொண்டுவரப்பட்டு, ஏல முறையில் விற்பனை நடக்கிறது. இங்கு கொள்முதல் செய்யப்படும் வெற்றிலை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்குச் செல்கின்றன.

வெற்றிலை தொழில் மூலம் பரமத்தி அதன் சுற்றுவட்டாரத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளரகள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இத்தொழிலை நம்பியுள்ளவர்களுக்கு பல்வேறு வகையில் லாபம் ஈட்டித் தந்தாலும், அவ்வப்போது பல்வேறு பாதிப்புகளைச் சந்திக்கும் நிலையுள்ளது.

குறிப்பாக வாடல் நோய், வங்கு இலை சுருட்டை, ஈரப்புள்ளி, செம்பேன், செதில்பூச்சி உள்ளிட்ட நோய் தாக்குதலால் வெற்றிலை மகசூல் பாதிக்கப்படும்.

குறிப்பாக, வாடல் நோய் தாக்கம் ஏற்பட்டால் கொடிக்காலில் உள்ள கொடிகள் முழுவதும் நோய் வேகமாக பரவி முற்றிலும் அழியும் அபாயம் உள்ளது.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காணவும், வெற்றிலையில் புதிய ரகங்களை உற்பத்தி செய்யவும், மண் வளத்தை அறியவும் ப.வேலூர் அருகே பொத்தனுாரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் செயல்பட்டது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஆராய்ச்சி மையம் மூடப்பட்டது.

இதனால், வெற்றிலையில் ஏற்படும் நோய் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகள் அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மீண்டும் இங்கு வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக ப.வேலூர் பகுதி வெற்றிலை விவசாயிகள் கூறியதாவது:

ஒரு ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்ய ரூ.10 லட்சம் வரை செலவிட வேண்டும். ஓராண்டுக்குப் பின்னரே மகசூல் பெற இயலும். தமிழகத்தில் 15 மாவட்டங்களில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டாலும், ப.வேலூர் சுற்றுவட்டார வெற்றிலைக்கு வியாபாரிகளிடம் வரவேற்பு அதிகம்.

வாடல் நோய், இலைசுருட்டை போன்ற நோய்களால் வெற்றிலை மகசூல் பாதிக்கப்படும். இந்நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த பொத்தனூர் வெற்றிலை ஆராய்ச்சி மையம் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டு வந்தது. தற்போது, பொத்தனூர் ஆராய்ச்சி மையம் மூடப்பட்டு, கோவையில் செயல்பட்டு வருகிறது.

இதனால், வெற்றிலை விவசாயிகளுக்குச் சாகுபடி தொடர்பான வழிகாட்டுதல், நோய் தாக்கத்தின்போது கட்டுப்படுத்த வழிமுறை தெரியாமல் வருவாய் இழப்பைச் சந்திக்கும் நிலையுள்ளது.

இதைத் தடுக்க பொத்தனூரில் மீண்டும் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x