Published : 17 Jun 2023 06:45 AM
Last Updated : 17 Jun 2023 06:45 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் உள்ள அல்லபுத்தூர் ஏரியின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் மாநகராட்சி, பொதுப்பணித்துறை இடையேயான நிர்வாக சிக்கலால், ஆக்கிரமிப்பாளர்களால் ஏரி சீரழிந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியின் 22-வது வார்டு திருக்காலிமேடு அருகே சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அல்லபுத்தூர் ஏரி உள்ளது. ஒக்கப்பிறந்தான் குளத்திலிருந்து வெளியேறும் உபரிநீர் மஞ்சள் நீர் கால்வாய் மூலம் அல்லபுத்தூர் ஏரியை வந்தடைகிறது. பின்னர் இந்த ஏரி நிரம்பியதும் திருவீதி பள்ளம் பகுதியில் உள்ள கலங்கல் வழியாக உபரிநீர் வெளியேறி, கால்வாய் மூலம் பூசிவாக்கம் ஏரிக்கு செல்கிறது. ஆனால், நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு மற்றும் மஞ்சள்நீர் கால்வாய் கழிவு நீர் கால்வாயாக மாறியதால், நேதாஜி நகர் பகுதியில் உள்ள ஏரியின் நீர்வரத்து கால்வாய் மூடப்பட்டு நீர்வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனினும், மழைக்காலங்களில் மட்டும்ஏரியில் ஆங்காங்கே சிறிதளவு தண்ணீர் மட்டுமே தேங்கி நிற்கும் நிலை உள்ளது.மேலும், ஏரியின் கலங்கல் முற்றிலும் சேதமடைந்துள்ளதால், ஏரியை ஆக்கிரமித்து குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஏரிக்கு நீர்வரத்து ஏற்பட்டால் தங்களின் குடியிருப்புகள் பாதிக்கப்படும் என்பதால், நீர்வரத்து ஏற்படுத்தும் பணிகளுக்கு ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்து இடையூறு செய்வதாக கூறப்படுகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம், மாநகராட்சி நிர்வாகம் ஏரியின் அருகேயுள்ள குடியிருப்பு பகுதிகளில் சூழும் மழைநீரை, ஏரிக்கு கொண்டு செல்வதற்காக திருக்காலிமேடு-சின்ன காஞ்சிபுரம் செல்லும் சாலையின் குறுக்கே கால்வாய் அமைக்கும் பணிகளை தொடங்கியது. ஆனால்,ஆக்கிரமிப்பாளர்கள் கால்வாய்அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால், ஆக்கிரமிப்புகளை அகற்றி கலங்கல், கால்வாய்களை சீரமைத்து ஏரிக்கு நீர் வரத்து ஏற்படும் பணிகளை தொடங்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் மற்றும் நீர்வள ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, விவசாயிகள் சங்க நிர்வாகி கே.நேரு கூறியதாவது: கடந்த 2015-ம் ஆண்டுகனமழையின்போது மஞ்சள் நீர் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ளநீர் அல்லபுத்தூர் ஏரியில்விடப்பட்டதால் ஏரி நிரம்பியது. ஆனால், கரையோர குடியிருப்பாளர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும், இந்த ஏரியில் தண்ணீர் தேக்குவதன் மூலம் நகரப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும். இயற்கையாகவே ஏரியின் கரைகள் மிகவும் பலமாகவும் மற்றும் பள்ளமான பகுதியில் ஏரி உள்ளதால் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் குறைவு.
ஆனால், பொதுப்பணித்துறை தங்கள் ஏரியில்லை என சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை. அதேபோல், மாநகராட்சி நிர்வாகம் பொதுப்பணித்துறை ஏரி எனக்கூறி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தயக்கம் காட்டுகிறது. இதனால், ஏரியை சிறிது சிறிதாக ஆக்கிரமித்து மனை பிரிவாக மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதனால், மாவட்ட ஆட்சியர் இரண்டு நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசித்து ஏரியின் கலங்கள் மற்றும் நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து, சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான ராஜ்கமல் கூறியதாவது: வேறு எங்கும் இல்லாத வகையில், நகரப்பகுதியில் நடுவே அமைந்துள்ள இந்த ஏரியை முறையாக பராமரித்து தண்ணீரை சேமித்தால், நகரில் குடிநீர் பற்றாக்குறையே ஏற்படாது. அதேபோல், ஏரியின் பிரதான நீர்வரத்து கால்வாயாக விளங்கும் மஞ்சள் நீர் கால்வாயின் மீது ரூ.40 கோடி மதிப்பில் மூடி அமைக்கப்பட உள்ளது.
எனினும், உலக பிரசித்திப் பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் அருகே அமைந்துள்ள ஏரியில், பறவைகள் அதிகளவில் தங்கும் நிலை உள்ளதால், கரைகளை பலப்படுத்தி நடைபாதைகள் அமைத்தால் உள்ளூர் மக்கள் மற்றும் கோயிலுக்கு வரும் வெளிமாநில பயணிகளின் சுற்றுலா தலமாகவும் மாறும். இதற்கு சான்றாக ஏற்கெனவே, ஏரியின் கரையோரங்களில் உள்ள முட்புதர்களில் புள்ளிமான்கள் வசித்து வருகின்றன. இவை இனப்பெருக்கம் செய்து குட்டிகளுடன் ஏரியில் வலம் வந்ததை சான்றாக எடுத்துக் கொள்ளலாம். அதனால், போர்கால அடிப்படையில் ஏரியை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் கூறும்போது, அல்லபுத்தூர் ஏரியில் கால்வாய் அமைத்து நகரின் ஒருபகுதி மழைநீரை சேமிக்கலாம் என்பதற்காக, கால்வாய் அமைக்க திட்டமிட்டோம். ஆனால், ஏரியையொட்டி வசிக்கும் சிலர் கால்வாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளனஎன்றார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி கூறியதாவது: அல்லபுத்தூர் ஏரியின் பராமரிப்பு பணிகளுக்காக திட்டமதிப்பீடு தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளேன். மேலும், உள்ளூர் மக்களின் பொழுது போக்கு அம்சமாக மாற்றும் வகையில் ஏரியில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக சுற்றுலாத்துறை அதிகாரிகளிடம் ஆலோசித்து நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment