Last Updated : 14 Jun, 2023 03:36 PM

 

Published : 14 Jun 2023 03:36 PM
Last Updated : 14 Jun 2023 03:36 PM

வெள்ளியங்கிரி மலையில் சேகரிக்கப்பட்ட 14 டன் பிளாஸ்டிக் கழிவுகள்!

கோவை: கோவை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில், போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட வெள்ளியங்கிரி மலையும் ஒன்று. அங்கு மலையேற ஆண்டுதோறும் மார்ச் முதல் மே மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

அவ்வாறு செல்லும் பலர், தாங்கள் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிஸ்கெட், தின் பண்டங்கள் உள்ளிட்டவற்றின் கவர்களை அங்கேயே தூக்கி எறிந்துவிட்டு வந்தனர். இதனால், மலைப்பாதை முழுவதும் கழிவுகள் தேங்கி, அவற்றை அகற்றுவது வனத்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்து வந்தது.

எனவே, பக்தர்கள் மலையேறும்போது கொண்டுவரும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு வைப்புத்தொகை பெற்றுக்கொண்டு, கீழேவந்து பாட்டிலை திரும்ப அளித்தபிறகு அந்த தொகையை அளிக்கும் திட்டத்தை வெள்ளியங்கிரியில் செயல்படுத்த வேண்டும் என ‘இந்துதமிழ் திசை’ நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து, இத்திட்டத்தை கடந்த பிப்ரவரி 17-ம் தேதி முதல் வனத்துறையினர் அமல்படுத்தினர்.

இதன்படி, மலை ஏறுவதற்கு முன் பக்தர்கள் எடுத்து வரும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தலா ரூ.20 வைப்புத் தொகையாக பெற்றுக் கொள்ளப்பட்டு, பணம் பெற்றதற்கு அடையாளமாக பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மலையேறி, இறங்கியபிறகு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பாட்டிலை அளித்துவிட்டு வைப்புத்தொகையை பக்தர்கள் திரும்பபெற்றுக்கொண்டனர். கடந்த மே 31-ம் தேதியுடன் பக்தர்கள் மலையேறுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, “அனுமதிக்கப்பட்ட 103 நாட்களில் வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர்கள் கொண்டுசென்ற 1.98 லட்சம் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி அனுப்பப்பட்டது. இதில், 84.50 சதவீத பாட்டில்கள் திரும்ப வந்துள்ளன. மொத்தம் 14 டன் பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள் சேகரிக்கப்பட்டு, மறுசுழற்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன”என்றனர்.

கீழே சோதனை; மேலே அனுமதி: மலை அடிவாரத்தில் பிளாஸ்டிக் கவர்கள், பாட்டில்களை கொண்டு செல்வதை தடை செய்யசோதனையிடும் வனத்துறை, மலை மீது, மலைவாழ் மக்கள் கடைகளை அமைத்து பிஸ்கெட்கள், குளிர்பானங்கள், பிளாஸ்டிக் கவர்களில் தின்பண்டங்களை விற்க அனுமதிக்கிறது.

இதனால், மலையேறும் பக்தர்கள் அவற்றை வாங்கி, ஆங்காங்கே தூக்கி எறிவதால் மலை முழுவதும் பிளாஸ்டிக் கவர்கள் காற்றில் பரவுகின்றன. மழை பெய்யும்போது அவை நீரோடைகளில் கலக்கின்றன. இது விலங்குகளுக்கும், மலையேறும்போது சுனைநீரை பருகும் பக்தர்களுக்கும் கேடு விளைவிக்கிறது.

இது குறித்து சூழலியல் செயற்பாட்டாளர் மோகன் ராஜ் கூறியதாவது: மலை மீது பிளாஸ்டிக் கவர்களில் விற்கப்படும் ஒவ்வொரு தின்பண்டத்துக்கும், குளிர்பான பாட்டிலுக்கும் கூடுதலாக ரூ.20 டெபாசிட் பெற்று, அந்த கவர், பாட்டிலைதிருப்பி அளித்தால் மட்டுமே டெபாசிட் தொகையை திருப்பி அளிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இல்லையெனில், மலைமீது பிளாஸ்டிக் கவர்களில் தின்பண்டங்கள், குளிர்பானங்கள் போன்றவற்றை விற்பதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். வெள்ளியங்கிரிக்கு முன்பாக உள்ள முள்ளாங்காடு வன சோதனைச் சாவடியிலேயே ஒலிபெருக்கியில் அறிவிப்பு மற்றும் சோதனை செய்தால், மலையடிவாரத்தில் சோதனை செய்வது எளிதாக இருக்கும். ஒரு சிலர் டெபாசிட் தொகையை திரும்ப பெறுவதில்லை.

இந்த தொகை எவ்வளவு உள்ளது என சரியான கணக்கு விவரத்தை வனத்துறை அதிகாரிகள் தெரிந்துகொள்ள, பாட்டிலில் ஸ்டிக்கர் ஒட்டுவதுடன், சிறிய டோக்கன் அட்டையை வரிசை எண்ணுடன் அச்சடித்து விநியோகிக்கலாம். அந்த டோக்கன் அட்டையை திரும்ப அளித்தால், டெபாசிட் தொகையை திருப்பி அளிக்கலாம். இதன்மூலம், எவ்வளவு டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டது, அதில் எவ்வளவு திரும்ப வரவில்லை என துல்லியமான தகவல் கிடைக்கும்.

வனப்பணியாளர்கள் பற்றாக்குறை: சிவராத்திரி, சித்ரா பௌர்ணமி போன்ற முக்கிய நாட்களில் மட்டும்தான் வனப்பணியாளர்கள், தன்னார்வலர்கள் அதிகம்பேர் பக்தர்களின் பைகளை சோதனை செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பணியாளர்கள் பற்றாக்குறையால் மற்ற நாட்களில் தீவிரமாக வனத்துறையினரால் சோதனை மேற்கொள்ள முடியவில்லை.

எனவே, மலையேற அனுமதி அளிப்பதற்கு ஒரு மாதத்துக்குமுன்பாகவே தன்னார்வலர்களின் உதவியை கோரினால், சுழற்சி முறையில் வார இறுதி நாட்களில் கூட்டம் வரும்போது சோதனை செய்ய உதவியாக இருக்கும். இவ்வாறு சோதனை பணியில் பழங்குடி கிராம மக்களையும் ஈடுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறும்போது, “வரும் ஆண்டில் இவையனைத்தும் கவனத்தில் கொள்ளப்பட்டு, பிளாஸ்டிக் கழிவுகளை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய உதவிய ‘ரீ கம்போஸ்’ மறுசுழற்சி நிறுவனத்தைச் சேர்ந்த சரண், பிரசாந்த் ஆகியோர் கூறும்போது, “14 டன் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சிக்கு அனுப்பியதன் மூலம், 46,652 சதுர அடி வனப்பரப்பில் கழிவுகள் தேங்குவது தவிர்க்கப்பட்டுள்ளது. புதிதாக பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்களை உருவாக்கத் தேவையான 9,452 லிட்டர் தண்ணீர், புதிதாகபொருட்கள் தயாரிக்க தேவையான 28,180 கிலோவாட் ஆற்றல்,4,412 லிட்டர் எண்ணெய் மிச்சமாகியுள்ளது. 91 கிலோ கார்பன் உமிழ்வு தவிர்க்கப்பட்டுள்ளது. மறுசுழற்சி செய்ய அனுப்பிவைக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளானது துணிகள், பிளாஸ்டிக் கதவுகள், சேர் ஆகியவை தயாரிக்கவும், சிமென்ட் தயாரிக்க எரிபொருளாகவும் பயன்படுத்தப்பட உள்ளது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x