Published : 10 Jun 2023 07:55 PM
Last Updated : 10 Jun 2023 07:55 PM
கன்னியாகுமரி: "அரிசிக்கொம்பன் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். யானை நல்ல உடல்நலத்துடன் இருக்கிறது. கன்னியாகுமரி வன பணியாளர்கள் 20 பேர் அந்த பகுதியில் பணியில் இருந்து வருகின்றனர். ஒருவேளை அந்த யானை கன்னியாகுமரி பகுதிக்குள் வந்தால், எந்த பாதையில் வரக்கூடும் என்பதை கண்காணித்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டும்" என்று மாவட்ட வன அலுவலர் இளையராஜா கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "கடந்த சில தினங்களுக்கு முன்பு, அரிசிக்கொம்பன் யானை கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்டது. தற்போது அந்த யானை கோதையாறு முகாம் பகுதியில்தான் இருந்து வருகிறது. களக்காடு முன்டந்துறை வனக்கோட்டப் பகுதியில்தான் அந்த யானை உள்ளது. கன்னியாகுமரி வனக்கோட்ட பகுதியில் அந்த யானை இல்லை. களக்காடு, அம்பாசமுத்திரம், கன்னியாகுமரி ஆகிய மூன்று வனக்கோட்ட பணியாளர்களுமே இரவு பகலாக அந்த யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகிறார்கள்.
வனத்துறை அதிகாரிகள் மூலமாக ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கு ஒருமுறை யானை குறித்த தகவல்கள் எங்களுக்கு கிடைத்து வருகிறது. நாங்களும் அதைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு வருகிறோம். மேலும், யானை கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களிடம் ரிஸீவர்கள் உள்ளன. அது யானை அருகில் வருவதை முன்கூட்டியே தெரிவித்துவிடும். இவ்வாறு இரண்டு வழிமுறைகள் மூலம் யானையின் நடமாட்டத்தை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.
யானை நல்ல உடல்நலத்துடன்தான் இருக்கிறது. கன்னியாகுமரி வன பணியாளர்கள் 20 பேர் அந்த பகுதியில் பணியில் இருந்து வருகின்றனர். ஒருவேளை அந்த யானை கன்னியாகுமரி பகுதிக்குள் வந்தால், எந்த பாதையில் வரக்கூடும் என்பதை கண்காணித்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டும்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மின் வாரிய அதிகாரிகள் என அனைவருமே தொடர்பில்தான் இருந்து வருகிறோம். எந்த சூழலையும் சமாளிக்கக்கூடிய வகையில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT