Published : 09 Jun 2023 04:03 AM
Last Updated : 09 Jun 2023 04:03 AM
உதகை: கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத நாட்டின் முதல் மாவட்டமாக நீலகிரி உருவாக வாய்ப்புள்ளதாக, கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்தார்.
கரியமில வாயு வெளி யேற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகள் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் உதகையிலுள்ள தமிழகம் விருந்தினர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தலைமை வகித்தார். சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் துறை இயக்குநர் தீபக் பில்ஜி வரவேற்றார்.
மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித்பேசும்போது, "நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடை உட்படசுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம்மாவட்டம் சுற்றுலாவை சார்ந்துள்ளதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு கோடை காலத்தில் ஒரு நாளைக்கு 8000 வாகனங்கள் வந்த நிலையில், இந்தாண்டு 24 ஆயிரம் வாகனங்கள் வந்துள்ளன. இது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
இதனால், கரியமில வாயு வெளியேற்றம் அதிகரித்துள்ளது. இதை குறைக்க, கட்டுப்படுத்தப்பட்ட சுற்றுலா நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இங்கு பசுமை பரப்பு 65 சதவீதமாக உள்ள நிலையில், தேயிலை தோட்டங்கள், கட்டிடங்கள் மற்றும் பிற பயன்பாட்டுக்கு மாற்றப்படுவது கவலை அளிக்கிறது" என்றார்.
கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ பேசும்போது, "கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க அரசு கொள்கை வகுத்து செயல்படுகிறது. அதனடிப்படையில், கடந்தாண்டு மாநிலத்தில் 3 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இதில், 80 சதவீத மரக்கன்றுகள் உயிர் பிழைத்துள்ளன. தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாற்றங்கால்களில் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இந்தாண்டு 7 கோடி மரக்கன்றுகள் நடவுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. வனங்களில் பசுமை போர்வையை மீட்டெடுக்க மரக் கன்றுகள் நடவுப் பணி உதவும். சீரழிந்த வனங்களை மீட்டெடுத்தல் நடவடிக்கைக்காக, நபார்டுவங்கி நிதியுதவியின் கீழ் 5 ஆண்டுகளுக்கு ரூ.490 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழகத்தில் தான் சதுப்பு நிலங்களில் பொருளாதார மதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஒரு சதுப்பு நிலத்தின் பொருளாதார மதிப்பு ரூ.54 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும், காலநிலை மாற்றம் குறித்தும் தமிழ்நாடு அரசு கொள்கை வகுத்துள்ளது. அதன் படி, தமிழகத்தில் நீலகிரியில் தான் முதல் காலநிலை மாற்றம் குழு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் அலுவலராக மாவட்ட வன அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தை கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும். இந்தியாவில் கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத முதல் மாவட்டமாக நீலகிரி உருவாக வாய்ப்புள்ளது. இதற்காக இங்கு மின் வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்க வேண்டும். நீலகிரியின் பசுமை போர்வையை அதிகரிக்க வேண்டும் என கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க 3 மாதங்களில் ஒருங்கிணைந்த திட்டம் தயாரிக்கப்படும்" என்றார்.
தமிழ்நாடு ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் மான்டெக் சிங் அலுவாலியா, எரிக் சோல்ஹிம், ஏ.ராமச் சந்திரன், சவுமியா சுவாமிநாதன், நிர்மல் ராஜா, ரமேஷ் ராமச் சந்திரன், சுந்தர்ராஜன் ஆகியோர் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை இணை இயக்குநர் எல்.சவுமியா நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT