Published : 09 Jun 2023 02:11 PM
Last Updated : 09 Jun 2023 02:11 PM

பால் தொழிற்சாலையால் மாசடையும் அனுமன் நதி - விளை நிலங்கள், நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்

மொடக்குறிச்சி வட்டம், ராசாம்பாளையம் கிராமத்தில் கழிவுநீர் கலப்பால் மாசடைந்து வெள்ளை நிறத்தில் ஓடும் அனுமன் நதி.

ஈரோடு: கொடுமுடி அருகே ராசாம்பாளையத்தில் செயல்படும் தனியார் பால் தொழிற்சாலை கழிவுநீரால் அனுமன் நதி மாசடைந்துள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம் அவல்பூந்துறை பேரூராட்சிக்குட்பட்டது ராசாம்பாளையம் கிராமம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட இக்கிராமத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பால் மற்றும் பால்பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆலை தொடங்கப்படும்போதே, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி, இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால், விதிமுறைகளின்படி ஆலை இயங்கும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து ஆலை இயங்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், ராசாம்பாளையம் பகுதியில் ஓடும் காவிரியின் கிளைநதியான அனுமன் நதியில் கடந்த சில நாட்களாக, வெள்ளை நிறத்தில் துர்நாற்றத்துடன் கழிவுநீர் கலந்து சென்றதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பால் உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அனுமன் நதி மாசடைவதாகக் குற்றம்சாட்டி கடந்த இரு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து ராசாம்பாளையத்தைச் சேர்ந்த எஸ்.பிரகாஷ் கூறியதாவது: எங்களது கிராமத்தின் வழியாக ஓடும் அனுமன் நதி, பாசனத்துக்கும், கால்நடைகளுக்கு குடிநீராகவும் பயன்படுகிறது. காவிரியின் கிளைநதியான அனுமன் நதி 54 கிமீ தூரம் ஓடி கொடுமுடி காவிரியில் கலக்கிறது. இந்த நதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை மூலம் 6,000 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.

ராசாம்பாளையத்தில் இயங்கும் பால் தொழிற்சாலையின் கழிவுகள், அனுமன் நதியில் கலக்கின்றன. இதனால், நதி நீர் துர்நாற்றம் வீசுகிறது. மீன்கள் இறந்து மிதக்கின்றன. கழிவுநீர் கலப்பால் அனுமன் நதி மாசடைவதோடு நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படுகிறது. அனுமன் நதியால் பாசனம் பெறும் விவசாய நிலங்களும் இதனால் பாதிப்படையும். ராசாம்பாளையம் அரசுப் பள்ளிக்கு அருகே விவசாய நிலத்தில் தனியார் பால் உற்பத்தி தொழிற்சாலை அமைந்துள்ளது.

இதிலிருந்து வீசும் துர்நாற்றத்தால், பள்ளி குழந்தைகளும், கிராம மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளோம். ஆலை நிர்வாகத்துக்கு வேண்டியவர்கள் கிராம மக்களை மிரட்டுகின்றனர். அதிகாரிகள் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கின்றனர். கிராம மக்களின் எதிர்ப்பை புரிந்து கொண்டு, நேர்மையான ஆய்வுக்கு உட்படுத்தி,

சுற்றுச்சூழலுக்கு பாதகம் விளைவிக்கும் பால் உற்பத்தி தொழிற்சாலையை நிரந்தரமாக மூட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். இது குறித்து அதிகாரிகளிடம் பேசியபோது, ‘குற்றச்சாட்டு எழுந்துள்ள ஆலையின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அனுமன் நதியில் இருந்து சோதனைக்கு மாதிரி நீர் எடுத்து அனுப்பப்பட்டுள்ளது’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x