Published : 09 Jun 2023 09:27 AM
Last Updated : 09 Jun 2023 09:27 AM

கடல், சுற்றுச்சூழல் சார்ந்த ஆய்வுகளில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்: அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவுறுத்தல்

அமைச்சர் கிரண் ரிஜிஜு

சென்னை: கடல், சுற்றுச்சூழல் குறித்த ஆராய்ச்சிகளில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.

உலக கடல் தின கொண்டாட்டம் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப ஆராய்ச்சி மைய (நியாட்) வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்று பேசியதாவது:

கடல் சார்ந்த அறிவியல் வளர்ச்சியில் நாம் முன்னேற்றம் அடைந்துள்ளோம். கடல்சார் படிப்புகளில் தற்போது அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. கடல் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த ஆராய்ச்சி படிப்புகளில் மாணவர்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். கடல்சார் பொருளாதாரத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரம் வளரும். நாட்டுக்குத் தேவையானதை உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்ற கல்வியை மாணவர்கள் தேர்வுசெய்ய வேண்டும்.

இதுதவிர விவசாயிகள், மீனவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்ததகவல்களை வழங்க வேண்டும். இயற்கையை மதிப்பதன் மூலமே அவை நமக்குத் தந்த சிறப்பம்சங்களை நம்மால் பாதுகாக்க முடியும். மேலும்,ஆழ்கடலுக்குள் சென்று ஆய்வு மேற்கொள்ளும் சமுத்ராயன் திட்டம் முன்னேற்றம் அடைந்துள்ளது. விண்வெளியைப் போல கடலின் ஆழத்தை நாம் ஆராய வேண்டும். அதற்கான பணிகளில் நம் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்றார்.

இந்நிகழ்வில் மத்திய புவி அறிவியல் துறைச் செயலர் எம்.ரவிசந்திரன், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல (சென்னை) தலைவர் எஸ்.பாலசந்திரன், நியாட் இயக்குநர் ஜி.ஏ.ராமதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக உலக கடல் தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட்நகர் கடற்கரையைச் சுத்தம் செய்யும் பணிகளை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று தொடங்கி வைத்தார். இந்த பணிகளில் சென்னை விஐடி உட்பட பல்வேறு கல்வி மையங்களின் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர்.

முன்னதாக உலக கடல் தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட்நகர் கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகளை மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ நேற்று தொடங்கி வைத்து பேசும்போது, ``இந்தியா 7,500 கி.மீ. தூரத்துக்கும் அதிகமான கடற்கரையை கொண்டுள்ளது. கடற்கரையை பேணிகாக்கவும் கடல்வாழ் உயிரினங்கள் நீடித்தவாழ்வுக்கும் மிக முக்கிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கடற்கரை பாதுகாப்பு குறித்து சென்னை உட்பட அனைத்து நகரங்களில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x