Published : 08 Jun 2023 07:26 PM
Last Updated : 08 Jun 2023 07:26 PM

மதுரை சுற்றுச்சூழல் பூங்காவை டெண்டர் எடுத்து பராமரிக்க யாரும் முன்வராததால் அடியோடு குறைந்த மக்கள் வருகை

மதுரை: மதுரை மாநகராட்சி பூங்கா பராமரிப்பு இல்லாமல் மழைக்கு விழுந்த மரங்கள் அகற்றப்படாமல் புதர் மண்டிக் கிடக்கிறது. பூங்காவை டெண்டர் எடுத்து யாரும் முன்வராததால் பொதுமக்கள் வருகை அடியோடு குறைந்தது.

மதுரை டாக்டர் தங்கராஜ் சாலையில் நகரின் மையமாக மாநகராட்சி அலுவலகம் வளாகத்தில் 5.5 ஏக்கரில் சுற்றுச்சூழல் பூங்கா உள்ளது. கடந்த 1999ம் ஆண்டில் இந்த பூங்கா திறக்கப்பட்டபோது பொதுமக்கள் அதிகளவு இந்த பூங்காவிற்கு வந்தனர். பல் வகை மரங்கள், அதன் கிளைகளில் அங்கும், இங்குமாக வட்டமிடும் பறவைகள், அதன் இரைச்சல் சத்தங்கள் நடுவே இந்த பூங்காவிற்கு நுழையும்போது ஏதோ அடர் வனத்திற்குள் சென்றதுபோன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்துகிறது. அதனால், இந்த சுற்றுச்சூல் பூங்கா மதுரையின் நுரையீரல் என்று அழைக்கப்பட்டது. தினமும் அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு காலை 10 மணி வரையும், மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டு இரவு 8 மணி வரையும் இந்த பூங்கா செயல்படுகிறது.

குழந்தைகளை மகிழ்விக்க லேசர் ஷோ, மியூசிக்கல் பவுண்டேசன்கள், பொதுமக்கள் நடைபயிற்சி செல்வதற்கான நடைபாதை, உடற்பயிற்சி கூடம், குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதற்கு விளையாட்டு உபகரணங்கள் போன்றவை குழந்தைகளையும், பொதுமக்களையும் குதூகலமடைய செய்தன. மாநகராட்சி ஆணையாளராக சந்தீப் நந்தூரி இருந்தபோது பூங்காவை மாநகராட்சி வாகன உபகரண கழிவுகளை கொண்டு தத்ரூபமாக பூங்காவில் வடிவமைத்த பறவைகள், விலங்குகள் சிற்பங்கள் பாப்போரை ரசிக்க வைத்தன. நகரில் உள்ள மிகப்பெரிய பூங்காக்களில் ஒன்றாக இந்த பூங்கா உள்ளது. வார விடுமுறை நாட்களில் பள்ளி குழந்தைகளுக்கு மிகப்பெரிய பொழுதுப்போக்கு இடமாக சுற்றுச்சூழல் பூங்கா இருந்து வந்தது.

காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் அதிகளவு நடைப்பயிற்சி மேற்கொள்ள இந்த சுற்றுச்சூழல் பூங்காவிற்கு வந்து சென்றனர். மதுரையில் தங்கும் முக்கிய அரசியல் கட்சித்தலைவர்கள், மறுநாள் காலையில் இந்த பூங்காவில்தான் நடைபயிற்சி செல்வார்கள். அந்த அளவிற்கு தமிழகத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காக்களுக்கு மதுரை மாநகராட்சி சுற்றுச்சூல் பூங்கா முன் மாதிரியாக திகழ்ந்து வந்தது. 'கரோனா' தொற்றுக்குபிறகு இந்த பூங்கா பராமரிப்பை மாநகராட்சி கைவிட்டது.

பூங்காவில் உள்ள பெஞ்சுகள் உடைந்து அமருவதற்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. கழிவறைகள் சுகாதாரமற்ற நிலையில் உள்ளன. 2017ம் ஆண்டு மகநராட்சி ஆணையாளராக சந்தீப் நந்தூரி, வாகன குப்பைகளை கொண்டு தயார் செய்து பூங்காவில் வைக்கப்பட்ட பறவைகள், விலங்குகள் சிற்பங்கள் சிதலமடைந்து உடைந்துபோய் உள்ளன. அதன் கூர்மையான உலோக முனைகள், ஓடிவிளையாடும் குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

பூங்கா காலை 5 மணி முதல் 10 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்து இருக்கிறது. மநகராட்சியில் ஏராளமான பல்வகை மரங்கள், செடிகள் உள்ளன. பூங்காவிற்கு விளையாட வரும் குழந்தைகள், அந்த மரங்களையும், செடிகளையும் அறியும் வகையில் அதன் மேல் பெயர் பலகைகளை வைக்கலாம். அதனால், மூலம் புதிய வகை மரங்களை குழந்தைகள் அறிய கூடும். பூங்காவில் பொதுமக்கள், குழந்தைகளுக்கான பொழுதுப்போக்கும் அம்சங்கள் குறைந்ததால் பூங்காவிற்கு வருவோர் எண்ணிக்கை பல மடங்கு குறைந்தது.

அதனால், பூங்காவை சரியான நேரத்தில் ஊழியர்கள் திறப்பதில்லை. கடந்த கோடைமழைக்கு பூங்காவில் இருந்த ஏராளமான மரங்கள் மழைக்கும், பட்டுப்போகியும் விழுந்தன. அந்த மரக்கிளைகளையும், மரத்துண்டுகளையும் அகற்றவில்லை. நடைபாதைகள் அருகே பூங்கா வளாகத்தில் உள்ள செடி, கொடிகளை முறையாக வெட்டிவிட்டு சீரமைக்காததால் அவையும் புதர் மண்டி கிடக்கின்றன.

மரக்கிளை காய்ந்து சருகாகி கிடக்கின்றன. அந்த புதருக்குள் பாம்புகள், விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளன. நடைபாதைகள் ஆங்காங்கே உடைந்து அவை சீரமைக்கப்படாமல் உள்ளன. அதனால், தற்போது நடைப்பயிற்சிக்காக பூங்காவிற்கு வருவோர் எண்ணிக்கையும் குறைந்தது. மரங்கள் விழுந்த இடங்களில் மீண்டும் மரக்கன்றுகள் வைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்காததால், மரங்கள் இல்லாத பூங்கா வளாகம் வெட்டவெளியாக உள்ளது.

இதேநிலை பூங்கா முழுமைக்கும் ஏற்படாமல் இருக்க மாநகராட்சி மேயர், ஆணையாளர், பூங்காவில் மரங்கள் இல்லாத இடங்களில் மரக்கன்றுகள் வைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தன்னோட அலுவலக வளாகத்திலே உள்ள இந்த பூங்காவையே மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்க முன்வராதபட்சத்தில், நகரின் மற்ற பூங்காக்களின் நிலை நினைத்தால் பரிதாபமாக உள்ளது.

பேச்சுவார்த்தை நடந்து வருகிறது; விரைவில் புதுப்பொலிவு: இதுகுறித்து மாநகராட்சி மேயர் இந்திராணி கூறுகையில், ''பல முறை பூங்காவை நேரில் சென்று பார்வையிட்டுள்ளேன். பூங்காவை புதுப்பொலிவுப்படுத்தி மதுரையின் சிறந்த பொழுதுப்போக்கு இடமாக மாற்ற இரண்டு முறை டெண்டர் வைத்தோம். ஆனால், சுற்றுச்சூழல் பூங்கா என்பதால் யாரும் டெண்டர் எடுக்க முன் வரவில்லை. தற்போது தனியாரை கொண்டு பூங்காவை பராமரித்து அவர்களை கொண்டே பூங்காவை பராமரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கூடிய விரைவில் பூங்கா புதுப்பொலிவுப்படுத்தப்படும்,'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x