Published : 07 Jun 2023 04:03 AM
Last Updated : 07 Jun 2023 04:03 AM

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நடப்பாண்டு 1.1 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு

கோவை: தமிழகம் முழுவதும் நடப்பாண்டு 1.1 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, காவேரி கூக்குரல் இயக்கம் தெரிவித்துள்ளது.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் கோவை நரசீபுரம் பகுதியில் மரக்கன்று நடும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் சண்முக சுந்தரம், அரோமா நிறுவன நிர்வாக இயக்குநர் பொன்னுசாமி, சுவாமி அஜய் சைதன்யா, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் மணிகண்டன், வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநர் கிருஷ்ணசாமி, சிறுதுளி அமைப்பின் வனிதா மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில் கு.சண்முகசுந்தரம் பேசும்போது, ‘‘ஈஷாவின் ‘பசுமை தொண்டாமுத்தூர்’ திட்டத்தின் மூலம் இதுவரை 2 லட்சம் மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ளன. பசுமை பரப்பை 22 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக அதிகரிக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படும்இப்பணியில் விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கெடுத்து வருவது பெருமைக்குரியது’’ என்றார்.

ஈஷா நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘கடந்த 25 வருடங்களாக சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான பணிகளை செய்து வரும் ஈஷா, காவேரி கூக்குரல் திட்டத்தின் மூலம் தமிழக, கர்நாடக மாநிலத்தில் காவிரி வடிநில பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில், மரக்கன்றுகளை நட்டு வருகிறது. அதில் தமிழகத்துக்கான நடப்பாண்டு இலக்கு 1.1 கோடி மரக்கன்றுகள் நடுவதாகும். இதுவரை 140 விவசாயிகளின் நிலங்களில் 1.6 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன’’ எனக் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x