Published : 05 Jun 2023 06:54 AM
Last Updated : 05 Jun 2023 06:54 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் மாம்பழ அறுவடை சீசன் தொடங்கி உள்ளதால், காட்டு யானைகள் அடிவாரப் பகுதியை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளன. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான மம்சாபுரம், செண்பகத்தோப்பு, அத்திகோயில், கான்சாபுரம், கூமாப்பட்டி ஆகிய பகுதிளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மா விவசாயம் நடைபெற்று வருகிறது. வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்ததால், மா விளைச்சல் அதிகரித்துள்ளது. தற்போது, மாம்பழ அறுவடை சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனால், மாம்பழங்களை உண்ணுவதற்காக காட்டு யானைகள் அடிவாரப் பகுதிகளில் முகாமிட்டுள்ளன. இந்த காட்டு யானைகள் குட்டிகளுடன் பகல் நேரத்திலேயே தோட்டத்துக்குள் புகுந்து விடுகின்றன.
சில நாட்களுக்கு முன். செண்பகத்தோப்பு வனப்பேச்சியம்மன் கோயில் அருகே காட்டு யானைகள் கூட்டம் பொதுமக்களை விரட்டியது. இதையடுத்து, மலையடிவாரப் பகுதிக்குள் மாலை 4 மணிக்கு மேல் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என, வனத்துறை எச்சரித்துள்ளது. இதற்காக, பல்வேறு இடங்களில் எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT