Published : 14 Mar 2021 03:14 AM
Last Updated : 14 Mar 2021 03:14 AM

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியாகிறது: ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து இன்று வெளியிடுகின்றனர்

அதிமுக தேர்தல் அறிக்கையை ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து இன்று வெளியிட உள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் ஏப்ரல்6-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. இதற்கிடையில், அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கைகள் வெளியிடுவதில் மும்முரமாக உள்ளன. தமிழகத்தில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தலைமையில் கூட்டணிகள் அமைக்கப்பட்டுள்ளதால் 5 முனை போட்டி நிலவுகிறது.

அமமுக சார்பில் கடந்த 12-ம் தேதியும், திமுக சார்பில் நேற்றும் தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதிமுக கூட்டணியில் உள்ள பாமக தனியாக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், அதிமுக இன்னும் வெளியிடவில்லை.

இந்நிலையில், சேலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள முதல்வர் பழனிசாமியும், வேட்புமனு தாக்கல் செய்வதற்காக போடிநாயக்கனூர் சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இன்று சென்னை திரும்புகின்றனர். அவர்கள் இருவரும் இணைந்து சென்னையில் இன்று அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசம் என்று முதல்வர் பழனிசாமி ஏற்கெனவே அறிவித்துள்ளார். இவற்றுடன் சேர்த்து 2011-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் நிலுவையில் உள்ள கைபேசி வழங்கும் திட்டம் உள்ளிட்ட கவர்ச்சிகரமான பல புதிய திட்டங்கள் அதிமுக தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தொகுதியை விட்டுக் கொடுக்கலாமா?

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. பத்மநாபபுரம் தொகுதிக்கு வேட்பாளர் யார் என்பதை அதிமுகவும் இன்னும் தெரிவிக்கவில்லை. இது பாஜகவுக்கு அதிக வெற்றி வாய்ப்புள்ள தொகுதி என்பதால், பத்மநாபபுரத்தை விட்டுக்கொடுத்து, வேறு தொகுதியை பெற்றுக் கொள்ளலாமா என்பது குறித்தும் அதிமுக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பும் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x