Published : 10 Mar 2021 03:11 AM
Last Updated : 10 Mar 2021 03:11 AM

மாவட்டச் செயலாளர்கள் சென்னையை விட்டு வெளியேற வேண்டாம்: அதிமுக தலைமை உத்தரவு

மனோஜ் முத்தரசு

வேட்பாளர் தேர்வு, தொகுதிபங்கீடு குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக ஆலோசனை மேற்கொள்ள இருப்பதால் மாவட்டச் செயலாளர்கள் யாரும் சென்னையை விட்டு வெளியேற வேண்டாம் என்று அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்கவுள்ளது. ஆனால், அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாமல் உள்ளது. அதேபோல், பங்கீடு பெற்ற பாமக, பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

அதேபோல், பேச்சுவார்த்தை நிறைவு செய்யப்பட்டு தமாகா மற்றும் பல்வேறு சிறிய கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்குவதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக நேற்று அறிவித்தது.

இதற்கிடையே, அதிமுக மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்கு உட்பட்ட தொகுதிகளுக்கு தலா 3 பெயரை வேட்பாளர்களாக பரிந்துரை செய்துள்ளனர். இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பதில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், அதிமுகவின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. முன்னதாக, அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இறுதி செய்வதிலும் சில சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஏனென்றால், தேர்தல் அறிக்கையில் உள்ள தகவல் வெளியானால், அது திமுகவுக்குச் சாதகமாகிவிடும் என்று அதிமுக தலைமை நினைக்கிறது.

இவ்வாறாக அதிமுக தலைமையில் ஏற்பட்டுள்ள குழப்பம் குறித்து முதல்வர் பழனிசாமியிடம் கேட்டபோது, “வேட்பாளர் பட்டியல், தொகுதிப் பங்கீடு என அனைத்தும் விரைவில் அறிவிக்கப்படும்” என்று நேற்று முன்தினம் தெரிவித்தார். அதன்படி, கட்சி விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள அதிமுக மாவட்டச் செயலாளர்கள் சென்னையிலேயே இருந்தால் வசதியாக இருக்கும்.

எனவே யாரும் சென்னையை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் வெளியூரில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் உடனே சென்னைக்கு வரவேண்டும் என்றும் அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மற்றும் ஆட்சிமன்ற குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று (10-ம் தேதி) காலை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தேர்தல் அறிக்கையைத் தவிர, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x