Published : 09 Mar 2021 03:11 AM
Last Updated : 09 Mar 2021 03:11 AM
அதிமுகவுடன் தேமுதிக கூட்டணியை உறுதிசெய்வதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டு வருகிறது.
அதிமுக கூட்டணியில் தேமுதிக தரப்பில் ஆரம்பத்தில் 41 தொகுதிகள் கேட்கப்பட்டன. கூட்டணியில் மற்ற கட்சிகளும் இருப்பதால் இவ்வளவு இடங்களை தர முடியாது என அதிமுக மறுத்து விட்டது. இதையடுத்து, 23 தொகுதிகள் வரையாவது ஒதுக்க வேண்டுமென அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின்போது அதிமுகவிடம் தேமுதிக வலியுறுத்தியது. அதிமுக தரப்பில் அதிகபட்சமாக 15 தொகுதிகள் வரையிலும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்க முன்வந்திருப்பதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, இந்த கூட்டணியை உறுதிசெய்யும் வகையில் தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமியை சென்னை பசுமைவழிசாலையில் உள்ள அவரது இல்லத்தில் தேமுதிக துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, பொருளாளர் இளங்கோவன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் நேற்று முன்தினம் இரவு நேரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் உடனிருந்தனர். இதன்பிறகு, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வமான ஓ.பன்னீர்செல்வத்தை தேமுதிக நிர்வாகிகள் நேரில் சந்தித்து பேசினர். ஆனாலும், இந்த கூட்டணியை உறுதி செய்து, தொகுதி பங்கீடு அறிவிக்கவில்லை.
இதற்கிடையே, தேமுதிக சார்பில் வரும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் 3 நாட்களாக நடைபெற்ற நேர்காணல் நேற்றுடன் நிறைவடைந்தது. அனைத்து தொகுதிகளுக்கான வேட்புமனுதாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் முடித்திருப்பதும் அக்கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று கட்சியின் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கும் அவசர ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று அனைத்து மாவட்ட செயலாளர்களிடமும் ஆலோசனை நடத்துகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT