Published : 08 Mar 2021 05:52 AM
Last Updated : 08 Mar 2021 05:52 AM
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காங்கிரஸ் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.
அவர் பம்பரமாக சுழன்று வந்தாலும் நிர்வாகிகள் ஒத்துழைப்பு எதிர்பார்த்த அளவில் இல்லை. கடந்த 6-ம் தேதிகானாடுகாத்தான், பள்ளத்தூர், கோட்டையூர் ஆகிய பேரூராட்சிகளின் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் காரைக்குடியில் நடந்தது. இதில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பெரும்பாலானோர் கலந்து கொள்ளவில்லை.
இதனால் கோபமடைந்த ப.சிதம்பரம், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பட்டியலை வைத்துக் கொண்டு வரிசையாகப் பெயரை வாசித்து, வந்துவிட்டார்களா என்று கேட்டார். தாமதமாக வந்தவர்களையும் எழுந்திருக்க வைத்து கேள்வி கேட்டார். அப்போது ப.சிதம்பரம் பேசியதாவது:
இக்கூட்டத்துக்கு வராமல் இருப்பவர்களுக்குத் தேர்தல் பணியாற்ற விருப்பமில்லையா?, கூட்டத்துக்கு வருவதற்கு விருப்பமில்லையா?, நிர்வாகிகள் குறைவாக வந்தால் கூட்டம் நடத்துவதில் பயனில்லை. கானாடுகாத்தானில் ஒருவர்கூட வரவில்லை. ஒரு பேரூராட்சியில் 28-க்கு 7 பேர் வந்துள்ளனர். மற்றொரு பேரூராட்சியில் 18-க்கு 14 பேர் மட்டுமே வந்துள்ளனர். நீங்கள் தேர்தல் வேலை செய்யப் போகிறீர்களோ, இல்லையோ, நான் இங்கே தான் இருப்பேன்.
சுற்றி, சுற்றி வந்து பிரச்சாரம் செய்வேன். இஷ்டம் இருந்தால் வேலை பாருங்கள். தேர்தல் நடக்கிற நேரத்தில் கூட்டத்துக்கு யாரும் வராவிட்டால் என்ன செய்வது என்று புலம்பித் தள்ளிவிட்டார்.
பள்ளியில் மாணவர்களின் வருகையை ஆசிரியர் தினமும் பதிவுசெய்வது போன்று, கட்சிக் கூட்டத்துக்கு வராதவர்களைப் ப.சிதம்பரம் கண்டறிந்து கேள்வி கேட்டது காங்கிரஸ் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT