Published : 08 Mar 2021 05:49 AM
Last Updated : 08 Mar 2021 05:49 AM
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 80 வயதுக்கும் மேற்பட்ட சுமார் 13 லட்சம் பேர் தபால் வாக்கு அளிக்க தகுதி பெற்றுள்ளதால், வாக்கு எண்ணிக்கையின்போது இழுபறியாக உள்ள தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தபால் வாக்குகள் தீர்மானிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ராணுவம், துணை ராணுவத்தில் பணியாற்றும் சேவைபிரிவு ஊழியர்கள், காவல்துறையினர் ஆகியோருக்கு தபால் வாக்கு வசதி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், நேரில் சென்று வாக்களிக்க இயலாத 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் விருப்பப்பட்டால் தபால் வாக்கு அளிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி தபால் வாக்களிக்க விருப்பம் உள்ளவர்கள், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமிருந்து படிவம் 12டி-ஐ பெற்று பூர்த்தி செய்து மார்ச் 12 முதல் 16-ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதில், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மட்டும் 12 லட்சத்து 91 ஆயிரத்து 132 பேர் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தமிழகத்தில் மொத்தம் உள்ள 6.27 கோடி வாக்காளர்களில் 2.07 சதவீதம் ஆகும். இதில், அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 718 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 253 பேரும் தபால் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மேலும், மாற்றுத்திறன் வாக்காளர்கள் 4.62 லட்சம் பேர் உள்ளனர்.
இதுதவிர ரயிலை இயக்கும் லோகோ பைலட், கார்டுகள், டிக்கெட் பரிசோதகர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோருக்கும் தபால் வாக்கு அளிக்க இந்த முறை தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ராணுவ வீரர்கள், காவல் துறையினர் என சுமார் 4.5 லட்சம் பேர் தபால் வாக்குகளை அளிக்க உள்ளனர். எனவே, இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இழுபறியாக உள்ள தொகுதிகளில் தபால் வாக்குகள் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தபால் வாக்கை வாக்குச்சாவடி அதிகாரிதான் நேரில் சென்று விண்ணப்பத்தை வாக்காளர்களிடம் வழங்க வேண்டும் என்பது தேர்தல் விதியாக உள்ளது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. எனவே, தபால் வாக்குகளில் முறைகேடுகளை தடுக்க தேர்தல் ஆணையம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT