Last Updated : 07 Mar, 2021 03:14 AM

3  

Published : 07 Mar 2021 03:14 AM
Last Updated : 07 Mar 2021 03:14 AM

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு; எண்ணிக்கை குறித்து மகிழ்ச்சியோ கவலையோ இல்லை: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கருத்து; வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகிறது

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், தொகுதி பங்கீட்டில் மகிழ்ச்சியோ கவலையோ இல்லை என்றும் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் மார்ச் 12-ம் தேதி தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் தயாரித்தல் ஆகிய பணிகளை விரைவாக மேற்கொண்டு வருகின்றன. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை ஏற்கெனவே பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இதையடுத்து, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்த பட்டியலை அக்கட்சியிடம் இருந்து அதிமுக பெற்றுள்ளது.

தொடர்ந்து, பாஜக, தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகளுடன் 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தேமுதிக 25 தொகுதிகளை கேட்டு அதில், 15 தொகுதிகள் தர அதிமுக ஒப்புக் கொண்ட நிலையில், முடிவு ஏற்படவில்லை. தமாகாவை பொறுத்தவரை 3 தொகுதிகள் என்பது முடிவாகியுள்ளது. விரைவில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

தேசிய கட்சியான பாஜகவை பொறுத்தவரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 20 தொகுதிகளையும் அதில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் விவரங்களையும் அதிமுகவிடம் அளித்து அதை கட்டாயம் தரவேண்டும் என்றும் கூடுதலாக 10 தொகுதிகள் என 30 தொகுதிகள் கோரியதாக தகவல்கள் வெளியாகின. இதுதவிர, அமமுகவை அதிமுக கூட்டணியில் இணைக்க பாஜக வலியுறுத்துவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், பாஜகவுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து வந்தது. இறுதியாக நேற்று முன்தினம் நள்ளிரவு பாஜகவுடனான தொகுதி உடன்பாடு குறித்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஒப்பந்தத்தில் கூறியிருப்பதாவது: ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளதமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துதமிழகத்தில் தேர்தலை சந்திப்பது என்றுமுடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு தமிழகத்தில் 20 சட்டப்பேரவை தொகுதிகள் ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஏப்ரல் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு, அதிமுக தனது முழு ஆதரவையும் அளிக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி, பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, பாஜக மாநில தலைவர் எல்.முருகன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘நடைபெறவுள்ள 2021 - சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், அதிமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணியில் பாஜகவுக்கு தமிழகத்தில் 20 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் நேற்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலதலைவர் எல்.முருகன், ‘‘அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் உள்ளோம். வெற்றி மட்டுமே எங்களது பிரதான இலக்கு. அதற்காக முழுமையாக முயற்சி செய்வோம்.

கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு குறித்துஅனைவரும் இணைந்து பேசி முடிவுக்குவந்திருக்கிறோம். எனவே, தொகுதி எண்ணிக்கைகள் குறித்து கவலைப்படவோ, மகிழ்ச்சி அடையவோ எதுவுமில்லை. பாஜகவின் வேட்பாளர் பட்டியல் மிக விரைவில் வெளியிடப்படும்’’ என்றார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை வெளியான நிலையில், எந்தெந்த தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ளதுஎன்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், மயிலாப்பூர், காரைக்குடி, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, வேளச்சேரி, காஞ்சிபுரம், திருத்தணி, பழநி, சிதம்பரம், கிணத்துக்கடவு, கோவைதெற்கு, ராசிபுரம், ஆத்தூர், திருவாரூர், திருவண்ணாமலை, வேலூர், ஒசூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, ராஜபாளையம் துறைமுகம் தொகுதிகளை பாஜக தரப்பு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில், போட்டியிடும் தொகுதிகள் மற்றும் அதற்கான வேட்பாளர்கள் அறிவிப்பு வெளியாகும் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x