Published : 07 Mar 2021 03:14 AM
Last Updated : 07 Mar 2021 03:14 AM

அமித் ஷா இன்று நாகர்கோவிலில் பிரச்சாரம்

நாகர்கோவிலில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்கிறார். சட்டப்பேரவை பொதுத் தேர்தலுடன், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில், கட்சிகளின் தேசிய தலைவர்கள் அடுத்தடுத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்துக்கு இன்று காலை 10 மணிக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலுக்கு செல்கிறார். அங்கு சுவாமி தரிசனம் முடித்து விட்டு, `வெற்றிக் கொடியேந்தி வெல்வோம்’ என்ற மக்கள் தொடர்பு நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.

பின்னர், காலை 11.15 மணியளவில் நாகர்கோவில் இந்து கல்லூரி சந்திப்பு முன்பிருந்து ரோடு ஷோ மூலம் பிரச்சாரம் செய்கிறார். ஒரு மணி நேரத்துக்கு இந்த பிரச்சார திட்ட வகுக்கப்பட்டுள்ளது. பிரச்சாரம் செட்டிகுளம் வழியாக வேப்பமூடு சந்திப்பை அடைகிறது. அங்கு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அமித் ஷா மரியாதை செலுத்துகிறார்.

மதியம் 12.30 மணியளவில் வடசேரி உடுப்பி ஓட்டலில் கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொள்கிறார். மதியம் 2 மணியளவில் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். அமித் ஷா வருகையை முன்னிட்டு நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளம், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், இந்து கல்லூரி சாலை, செட்டிகுளம், வேப்பமூடு, காமராஜர் சிலை ஆகிய பகுதிகளில், மத்திய பாதுகாப்பு உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இந்து கல்லூரி சந்திப்பில் இருந்து வேப்பமூடு காமராஜர் சிலை வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அமித்ஷா வருகை காரணமாகவே, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் பாஜக வேட்பாளராக பொன் ராதாகிருஷ்ணனை கட்சித் தலைமை நேற்றே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x