Published : 06 Mar 2021 03:13 AM
Last Updated : 06 Mar 2021 03:13 AM

அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் படிப்பில் 10% இடஒதுக்கீடு : இலவச கல்வி, மருத்துவம் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாமக

பாமகவின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி தலைவர் ஜி.கே மணி தலைமையில் சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ஆகியோர் இணைய வழியில் பங்கேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். பொருளாளர் திலகபாமா, வடக்கு மண்டல இணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, புதுச்சேரி மாநில அமைப்பாளர் தன்ராஜ், வழக்கறிஞர் கே.பாலு, பசுமைத் தாயகம் அமைப்பின் மாநிலச் செயலாளர் அருள் ஆகியோர் கலந்து கொண்டனர். படம்: ம.பிரபு

இலவச கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் கூடிய பாமகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை அதிமுகவுடன் இணைந்து பாமக சந்திக்கிறது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாமகவின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் ஜி.கே மணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொருளாளர் திலகபாமா, வடக்கு மண்டல இணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, புதுச்சேரி மாநில அமைப்பாளர் தன்ராஜ், வழக்கறிஞர் கே.பாலு, பசுமைத் தாயகம் அமைப்பின் மாநிலச் செயலாளர் அருள் ஆகியோர் கலந்து கொண்டனர். இணையவழியில் நிகழ்ச்சியில் பங்கேற்ற கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணியும் இணையவழியில் பங்கேற்றார்.

தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: மழலையர் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும். தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள 9-ம் வகுப்பில் இருந்து சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். உயர்கல்வி கற்பதற்கான பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வருமான வரம்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டு உயர்கல்வி இலவசமாக வழங்கப்படும். மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்குத் தரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவது போன்று, அண்ணா பல்கலைக் கழகத்திலும், அரசு பொறியியல் கல்லூரிகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யப்படும். தமிழகத்தில் அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்கப்படும். அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும். சென்னையில் ரூ.1000 கோடி செலவில் மாநில புற்றுநோய் மருத்துவ மையம் அமைக்கப்படும். கருவுற்றப் பெண்களுக்கான மகப்பேறு கால நிதியுதவி ரூ.18 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும்.

வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். வேளாண்மை சார்ந்து 4 அமைச்சகங்கள் ஏற்படுத்தப்படும். காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்துக்கு விரைவில் ஒப்புதல் பெறப்பட்டு, ஓராண்டுக்குள் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் முழுமையான சமூகநீதி வழங்குவதற்காகவும், இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காகவும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும். வன்னியர்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக உள் இடஒதுக்கீடு வழங்கப்படும். தமிழகத்தில் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். தமிழகத்தின் நிர்வாக வசதிக்காக 2-வது தலைநகராகத் திருச்சியும், 3-வது தலைநகரமாக மதுரையும் அறிவிக்கப்படும். தமிழகத்தின் தொழில் தலைநகரமாகக் கோயம்புத்தூர் அறிவிக்கப்படும். புதிய அரசு அமைந்தவுடன் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வெற்றிபெறும். அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மகளிருக்கான மகப்பேறு விடுப்புக் காலம் தற்போதுள்ள 9 மாதங்களில் இருந்து ஓராண்டாக அதிகரிக்கப்படும். தமிழகத்தில் சிறுபான்மையினரின் அச்சத்தைப் போக்கும் வகையில் தேசியக் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படாது. தேசிய மக்கள்தொகைப் பதிவேடு தயாரிக்கும் போது பெற்றோரின் பிறப்பிடம், பிறந்த தேதி, ஆதார் எண் ஆகியவை தொடர்பான 6 வினாக்கள் எழுப்பப்படாது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்படுவதை பாமக உறுதி செய்யும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x