Published : 06 Mar 2021 03:13 AM
Last Updated : 06 Mar 2021 03:13 AM

தென் மாவட்டங்களில் கூடுதல் தொகுதிகளில் களம் இறங்கும் திமுக

தென் மாவட்டங்களில் இந்த முறை கூடுதல் இடங்களில் போட்டியிட திமுக திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

வன்னியர் உள் ஒதுக்கீட்டை அறிவித்ததால் வடக்கு மண்டலம் மற்றும் கொங்கு மண்டலங்களில் அதிக தொகுதிகளில் களமிறங்க அதிமுக முடிவு செய்துள்ளது. அதிமுக கூட்டணிக்கான சாதக அம்சத்தை, தென் மாவட்டங்களில் பலவீனமாக மாற்றி அங்கு அதிக இடங்களில் போட்டியிட திமுக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகள் உள்ளன. இதில், திமுக கடந்த முறை 8 தொகுதிகளில் போட்டியிட்டு மதுரை மத்தி, கிழக்குத் தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. அதன் கூட்டணியில் மதுரை வடக்கு, திருமங்கலம் தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் தோல்வி அடைந்தது. இந்த முறை, கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூடுதல் கட்சிகள் சேர்ந்தாலும், திமுக 9 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு தொகுதியை மட்டும் கூட்டணிக் கட்சிக்கு விட்டுக்கொடுக்க முடிவு செய்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர் மற்றும் நத்தம் ஆகிய 7 தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த முறை வேடச்சந்தூரில் போட்டியிட்ட காங்கிரஸ் தோற்றது. திமுக போட்டியிட்ட 6 தொகுதிகளில் பழனி, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், நத்தம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த முறை திமுக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளது. வேட்பாளர் பட்டியலை தயார் செய்து தேர்தல் பணிகளை ஏற்கெனவே முடுக்கி விட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய தொகுதிகள் உள்ளன. 4 தொகுதிகளிலும் கடந்த முறை திமுக தோற்றாலும் இடைத்தேர்தலில் ஆண்டிப்பட்டி, பெரியகுளத்தில் வெற்றிபெற்றது. இந்த முறையும் 4 தொகுதிகளிலும் திமுக போட்டியிட உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர், சிவகாசி, வில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய 7 தொகுதிகள் உள்ளன. இந்த முறை 5 முதல் 6 தொகுதிகள் வரை திமுக போட்டியிட திட்டமிட்டுள்ளது. இதேபோல, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா 3 தொகுதிகளில் திமுக போட்டியிட முடிவு செய்துள்ளது. திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் திமுக கூடுதல் இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது. அதனால் கூட்டணிக் கட்சிகளுக்கு இன்னும் தொகுதிகளை ஒதுக்க முடியாமல் திமுக தாமதப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x