Published : 06 Mar 2021 03:13 AM
Last Updated : 06 Mar 2021 03:13 AM
அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி தொடர்கிறது, அடுத்த 2 நாளில் தொகுதி பங்கீடு முடியும் என அக்கட்சியின் துணை செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள தேமுதிகவுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக நடைபெற்ற 2 கட்ட பேச்சுவார்த்தையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. கூடுதல் தொகுதிகள் கேட்பதால், இந்த கூட்டணி உறுதி செய்வதில், தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
இதற்கிடையே, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் துணை செயலாளர் பார்த்தசாரதி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
வரும் சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட, இதுவரையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். இவர்களிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேர்காணல் நடத்தவுள்ளார். அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எங்கள் கூட்டணியில் சலசலப்பு இல்லை. முதல்கட்ட பேச்சுவார்த்தையில் 2011-ல் வழங்கியது போல், தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் வழங்க வேண்டுமென கேட்டோம்.
அதேபோல், மாநிலங்களவை எம்.பி தர வேண்டுமென கேட்டோம். இதற்கு அதிமுக தர ஒப்புக் கொண்டுள்ளது. கூட்டணியில் மற்ற பெரிய கட்சிகளும் இருப்பதால், தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதிகளை தர முடியாது என அதிமுக தெரிவித்துள்ளது. எனவே, 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் அதிமுக கூட்டணியில் போட்டியிட 25 தொகுதிகள் வரை கேட்டுள்ளோம். அதிமுகவைத் தவிர வேறு யாருடனும் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை 2 நாட்களில் சுமுகமாக முடியும். அதன் பிறகு, எந்தெந்த தொகுதிகள் என்பதை கூட்டணி கட்சிகள் ஒன்று கூடி, தொகுதிகளை தேர்வு செய்து பகிர்ந்து கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT