Published : 03 Mar 2021 03:22 AM
Last Updated : 03 Mar 2021 03:22 AM
தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர்களின் மகன்கள் வரும் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தங்கள் கட்சிகளில் மனு அளித்துள்ளனர்.
முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் (சபாநாயகர்) பிடிஆர்.பழனிவேல் ராஜன் மகன் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் கடந்த முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற மதுரை மத்திய தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பமனு வழங்கியுள்ளார். இவரது தாத்தா பி.டி.ராஜன் திமுகவின் முன்னோடி இயக்கமான நீதிக் கட்சி தலைவர்களில் ஒருவர். இவரது தந்தை 1996-2001- ஆண்டு திமுக ஆட்சியில் சட்டப்பேரவைத் தலைவராகப் பணியாற்றியவர். இப்படி பலமான அரசியல் பின்புலமும் இருப்பதால் இவரைத் தாண்டி, மதுரை மத்திய தொகுதியில் வேறு யாருக்கும் ‘சீட்’ வழங்கும் யோசனையே கட்சித் தலைமையிடம் இல்லை என்று கூறப்படுகிறது.
அதேபோல், திருமங்கலம் தொகுதியில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் சேடபட்டி முத்தையா மகன் மணிமாறன் போட்டியிட விருப்ப மனு வழங்கியுள்ளார். சேடப்பட்டி முத்தையா 1991-1996 அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவைத் தலைவராக இருந்தவர்.
மணிமாறன் திருப்பரங்குன்றம், திருமங்கலம் தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். இந்த முறை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற டாக்டர் சரவணனுக்கே மீண்டும் கட்சித் தலைமை ‘சீட்’ வழங்க உள்ளதால் மணிமாறன் திருமங்கலத்தில் போட்டியிட விருப்ப மனு வழங்கியுள்ளார்.
திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக மணிமாறன், இருப்பதால் மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் திருமங்கலம் தொகுதியில் இவருக்கு மீண்டும் ‘சீட்’ கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
மதுரை கிழக்கு மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை, அமமுக சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, இவர் 2019- ம்ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தவர் ஆவார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT