Published : 03 Mar 2021 03:22 AM
Last Updated : 03 Mar 2021 03:22 AM
ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி, தமிழகத்தில் முஸ்லிம்கள் கணிசமாக உள்ள 22 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதனால் தமிழக முஸ்லிம்களின் வாக்குகள் பிரியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த நவம்பரில் நடைபெற்ற பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளில் வென்று நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. இதனால்தான் பிஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதாக கூறப்பட்டது.
பிஹாரைத் தொடர்ந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகம், மேற்குவங்கத்தில் போட்டியிடப் போவதாக அசாதுதீன் ஒவைசி நேற்று முன்தினம் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2016 பேரவைத் தேர்தலில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி ஆகிய இரு தொகுதிகளில் ஒவைசி கட்சி போட்டியிட்டு 10,289 வாக்குகளைப் பெற்றது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத ஒவைசி கட்சி, வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள தமிழக பேரவைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதனால் தமிழகத்தில் முஸ்லிம்களின் வாக்குகள் குறிப்பாக உருது பேசும் முஸ்லிம்கள் வாக்குகள் பிரியுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் பேசிய ஏஐஎம்ஐஎம் கட்சியின் தமிழகத் தலைவர் டி.எஸ்.வக்கீல் அகமது, "வரும் பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், திருவாடானை, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, திருச்சி கிழக்கு, நாகப்பட்டினம் உள்ளிட்ட 22 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். தொகுதிகளின் எண்ணிக்கை, கூட்டணி குறித்து ஓரிரு நாள்களில் அசாதுதீன் ஒவைசி அறிவிப்பார்" என்றார்.
உருது பேசும் முஸ்லிம்களின் கட்சி என்று ஏஐஎம்ஐஎம் கட்சியை விமர்சிக்கிறார்களே என்று வக்கீல் அகமதுவிடம் கேட்டபோது, “உருது, தமிழ் என்றெல்லாம் நாங்கள் பிரிப்பதில்லை. தமிழ் முஸ்லிம்கள் வசிக்கும் தொகுதிகளில்தான் நாங்கள் அதிகம் போட்டியிடுகிறோம். குஜராத்தில் உருது முஸ்லிம்கள் இல்லை. ஆனால், சமீபத்தில் அங்கு நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் கணிசமான வார்டுகளில் வென்றுள்ளோம். தமிழகத்தில் முஸ்லிம் தலைவர்கள் உருவாக வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. முஸ்லிம்களுக்காக செயல்படுவதாகக் கூறும் மற்ற கட்சிகள் அண்ணா அறிவாலயத்தை சுற்றி வருகின்றன. ஆனால், திமுக சிறுபான்மை அணியின் செயலாளர் ஐதராபாத் சென்று ஒவைசியை சந்திக்கிறார். இதுதான் எங்கள் பலம். 22 தொகுதிகளிலும் நாங்கள் கணிசமான வாக்குகளைப் பெறுவோம்" என்றார்.
ஒவைசி கட்சி போட்டியிடுவது பிஹார் போன்ற மாநிலங்களில் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. எனவே, உங்களை பாஜகவின் ‘பி டீம்’ என்று விமர்சிக்கிறார்களே என்று வக்கீல் அகமதுவிடம் கேட்டபோது, "இது தவறான குற்றச்சாட்டு. ஒவைசியின் செயல்பாடுகளை கவனிப்பவர்கள் இப்படி குற்றம்சாட்ட மாட்டார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவை தோற்கடிக்கவே வியூகம் அமைக்கிறோம். கூட்டணி அமையாதபோதுதான் தனித்துப் போட்டியிடுகிறோம்" என்றார்.
அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் முஸ்லிம்களின் வாக்குகள் தங்கள் அணிக்கே கிடைக்கும் என்று திமுக உறுதியாக நம்புகிறது. இந்நிலையில் 22 தொகுதிகளில் ஒவைசி கட்சி போட்டியிடுவதால் முஸ்லிம்களின் வாக்குகள் பிரிந்து திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுபற்றி திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, “தமிழகத்தின் அரசியல் சூழல் மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்டது. இங்கு திமுக கூட்டணிக்குதான் முஸ்லிம்கள் வாக்களிப்பார்கள். ஒவைசி கட்சியால் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT