Last Updated : 03 Mar, 2021 03:22 AM

1  

Published : 03 Mar 2021 03:22 AM
Last Updated : 03 Mar 2021 03:22 AM

காங்கிரஸுடன் 2-ம் கட்ட பேச்சு; திமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் இழுபறி: மதிமுக, விசிக, இடதுசாரிகள் இரட்டை இலக்கத்தில் தொகுதி கேட்பதால் சிக்கல்

திமுக உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று சென்னை அண்ணா அறிவாலயம் வந்தார். உடன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் சவுந்தரராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் பி.சம்பத்.படம்: ம.பிரபு

சென்னை

மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்பதால் திமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

தொகுதிப் பங்கீடு குறித்து திமுக – காங்கிரஸ் இடையே நேற்று 2-ம் கட்ட பேச்சு நடைபெற்றது.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகள் உள்ளன. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் ஒரு தொகுதி என்ற நிபந்தனையால் இந்திய ஜனநாயகக் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. தி.வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு திமுக தொகுதிகளை ஒதுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு2 தொகுதிகள் நேற்று முன்தினம் ஒதுக்கப்பட்டன. மதிமுக, விசிகவுடன் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற பேச்சில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் அ.சவுந்தரராசன், பி.சம்பத் ஆகியோர் திமுகபொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினருடன் நேற்று காலை பேச்சு நடத்தினர். அதுபோல இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலாளர்கள் கே.சுப்பராயன் எம்.பி., மு.வீரபாண்டியன், தேசியக் குழு உறுப்பினர் ஜி.பழனிசாமி ஆகியோர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினருடன் நேற்று முதல் கட்டமாக பேச்சு நடத்தினர்.

மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட், இந்தியகம்யூனிஸ்ட் ஆகிய 4 கட்சிகளும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்பதால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. மார்க்சிஸ்ட் 11 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் 10 தொகுதிகளும் வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளன. இதனால் சிக்கல் நீடிக்கிறது.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலாளர் கே.சுப்பராயனிடம் கேட்டபோது, “பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. நாளை (மார்ச் 3) தொகுதி உடன்பாடு ஏற்படும்" என்றார்.

காங்கிரஸுடன் 2-ம் கட்ட பேச்சு: திமுக காங்கிரஸ் இடையே, கடந்த 25-ம் தேதி நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையின்போது 20 தொகுதிகள் தர திமுக முன்வந்தது. இந்நிலையில், கடந்த 27, 28, 1 தேதிகளில் தென் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் தொகுதிகள் குறித்து பேசியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் நேற்று மாலை 5.15 மணியளவில் டி.ஆர்.பாலுவுடன் பேச்சு நடத்தினர். ஒரு மணி நேரம் நடைபெற்ற பேச்சுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “திமுகவுடன் நடைபெற்ற தொகுதிப் பங்கீடு பேச்சு சுமூகமாக, மகிழ்ச்சியாக நடைபெற்றது. நாளை அல்லது நாளை மறுநாள் உடன்பாடு ஏற்படும். திமுக – காங்கிரஸ் கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. திமுக எத்தனை தொகுதியில் போட்டியிடும் என்பது தெரியாது. காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது என்பதை தெரிவித்துள்ளோம்" என்றார்.

திமுக பேச்சுவார்த்தை குழுவில் உள்ள அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர், “கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகள் கேட்கலாம். கூட்டணி கட்சிகளுடன் சுமூகமாக பேச்சு நடைபெற்று வருகிறது. எந்தச் சிக்கலும் இல்லை" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x