Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

கோவையில் மநீம தலைவர் கமல்ஹாசன் போட்டி?

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் வேட்பாளர் தேர்வு குழுவின் மூலம் நேற்று நடைபெற்றது.

கடந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் மொத்தம் 15,75,620 வாக்குகளைப் பெற்றனர்.

குறிப்பாக, வடசென்னை, தென்சென்னை, பெரும்புதூர், கோவை ஆகிய 4 தொகுதிகளில் மட்டும் தலா ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன. அதிகபட்சமாக கோவை தொகுதியில் போட்டியிட்ட ஆர்.மகேந்திரன் 1,45,104 வாக்குகளைப் பெற்றார்.

இந்நிலையில், சற்று கூடுதல் உழைப்பைச் செலுத்தினால் வெற்றி பெறலாம் என்பதால், சட்டப்பேரவைத் தேர்தலில் கோவையில் கமல்ஹாசன் போட்டியிட வேண்டும் என மநீம செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்து, அவரிடம் நேற்றுமுன்தினம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கூறும்போது, "கடந்த மக்களவைத் தேர்தலில்மற்ற இடங்களைக் காட்டிலும் கோவையிலும், சென்னையிலும் நாங்கள் பெற்ற வாக்குசதவீதம் அதிகம். கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தமுள்ள 275 வாக்குச்சாவடிகளில் 1,47,864 வாக்குகள் பதிவாகின. இவற்றில் 23,838 வாக்குகள் பெற்று, மக்கள் நீதி மய்யம் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. திமுக கூட்டணி சார்பில்போட்டியிட்டு, வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனைவிட, மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு 28 வாக்குச் சாவடிகளில் அதிக வாக்குகள் கிடைத்தன. அதேபோல, அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு, இரண்டாமிடம் பிடித்த பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனைவிட 4 வாக்குச்சாவடிகளில் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. 5 வாக்குச்சாவடிகளில் பாஜகவுக்கு இணையாக வாக்குகள் கிடைத்துள்ளன. பல வாக்குச்சாவடிகளில் சராசரியாக 10 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன.

இதுதவிர, கவுண்டம்பாளைம் சட்டப்பேரவைத் தொகுதியில் 33,594 வாக்குகள், கோவை வடக்கில் 27,549, சிங்காநல்லூரில் 28,643 வாக்குகள் கிடைத்துள்ளன. எனவே, கோவை (தெற்கு) அல்லது கோவை நகரில் உள்ள மற்ற 3 தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுமாறு கமல்ஹாசனிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். எனினும், அவர் இறுதி முடிவு எடுப்பார்" என்றனர்.

வேட்பாளர் நேர்காணல்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ளமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று பகல் 12 மணியளவில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது. நிர்வாக குழு, செயற்குழு மற்றும் சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட கட்சியின் நிர்வாகிகள் என சுமார் 50 பேர் ஒருவர் பின் ஒருவராக நேர்காணலில் பங்கேற்றனர்.

நேர்காணல் தொடர்பாக, கட்சியின் பொது செயலாளர் குமாரவேல் செய்தியாளர்களிடம் கூறுகையில்,”வரும் 7-ம் தேதி நடைபெற உள்ள கட்சியின் மாநாட்டில் முதல்கட்ட வேட்பாளர்களை அறிமுகம் செய்வது மட்டுமின்றி தேர்தல் தொடர்பான அனைத்து விவகாரங்கள் குறித்தும் எங்களுடைய நிலைப்பாடுகளை அறிவிப்போம். ஆம் ஆத்மி, சமக போன்ற கட்சிகள் மற்றும் பல்வேறு இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எனவே, 3-வது அணி அமைவது மட்டுமல்ல அது தேர்தலில் வெற்றி அணியாகவும் இருக்கும்” என்றார்.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பழ.கருப்பையா செய்தியாளர்களிடம் கூறுகையில், “காங்கிரஸ் ஆட்சி பறிபோனதற்கு 2ஜி தான் காரணம். மோடி ஆட்சிக்கு வந்ததற்கு பி டீம் திமுக தான் காரணம். எனவே, திமுக தான் பாஜகவின் பி டீம், நாங்கள் அல்ல”என்றார்.

எம்ஜிஆர் இல்லத்தில் இருந்து...

கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் மாவட்டங்கள் வாரியாக 5 கட்டங்களாக சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டியபோது, எம்ஜிஆருக்கு தார்மீக உரிமை கொண்டாடி அதிமுகவுக்கும், கமல்ஹாசனுக்கும் இடையே அறிக்கைப் போர் நடந்தது. இந்தநிலையில், சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிந்தைய தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட சென்னை ராமாவரம் எம்ஜிஆர் இல்லத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து கமல்ஹாசன் நாளை மாலை 4 மணிக்கு தொடங்க இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x