Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் 234 பேரும் ஒரே மேடையில் அறிமுகம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளின் வேட்பாளர்களும் சென்னையில் வரும் 7-ம் தேதி ஒரேமேடையில் அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளனர்.

நாம் தமிழர் கட்சி 2010-ல் தொடங்கப்பட்டது. அப்போதிருந்தே மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. 2016-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டது. ஆணும், பெண்ணும் சமம் என்ற முழங்கி வரும் இக்கட்சி, 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் பெண்களையும், 20 தொகுதிகளில் ஆண்களையும் களமிறக்கியது.

இந்நிலையில், ஏப்.6-ம் தேதி தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் ஒதுக்குவதில் மும்முரமாக உள்ளன. பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. மக்கள் நீதி மய்யம் கட்சியில் வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற்று வருகிறது.

வழக்கம்போல இத்தேர்தலிலும் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, தேர்தல் வேலைகளை வேகமாக மேற்கொண்டு வருகிறது. 234 தொகுதிகளின் வேட்பாளர்களைத் தேர்வு செய்துவிட்டது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சிஏ.திடலில் வரும் 7-ம் தேதி பகல் 3 மணியளவில் 234 தொகுதிகளின் வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்யும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இவர்களில் 117 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் அதன் செயல்பாட்டு வரைவு, ஆவணமாக வெளியிடப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x