Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் போட்டியிடும் தொகுதியில் பாமக வேட்பாளரை நிறுத்தி, அவரை தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாமக தலைமை வியூகம் வகுத்து வருகிறது.
பாமகவில் மாநில துணைப் பொதுச் செயலாளராக இருந்த பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏ தி.வேல்முருகன், பாமகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து பிரிந்து,2012-ம் ஆண்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியைத் தொடங்கி, இருதினங்களுக்கு முன்பு ஓமலூரில் 9-ம் ஆண்டு தொடக்க விழா மாநாட்டை நடத்தினார்.
வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறார் வேல்முருகன். நெய்வேலி தொகுதியை கேட்டிருக்கிறார். தற்போது அந்தத் தொகுதி திமுக வசம் உள்ளதால், அந்தத் தொகுதியை திமுக விட்டுத் தர முன்வரவில்லை அதனால், அவர் மீண்டும் பண்ருட்டியில் களம்காண காண்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி வட்டாராம்.
பண்ருட்டி தொகுதி தற்போது அதிமுக வசம் உள்ளது. அந்தத்தொகுதியில் மீண்டும் களம் காணதற்போதைய எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் ஆயத்தமாகி வருகிறார். தேர்தல் களப் பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார். இதனிடையே அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்டத்தில் தன்னோடு மல்லுக்கட்டும் சத்யாவுக்கு செக்வைக்கும் விதமாக, இந்த தருணத்தைப் பயன்படுத்தி பண்ருட்டி தொகுதியை கூட்டணிக் கட்சிக்குதாரை வார்க்க திட்டம் தீட்டியுள்ளார். இதைப் பயன்படுத்தி வேல்முருகனை எப்படியாவது வீழ்த்த பாமக தலைமை முனைப்பு காட்டி வருகிறது, பண்ருட்டி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அதிமுக தலைமையிடம் பாமக வற்புறுத்தி வருகிறது.
இதையறிந்த சத்யா பன்னீர் செல்வம், தைலாபுரத்துக்கே சென்று, தான் மீண்டும் பண்ருட்டியில் போட்டியிட விரும்புவதாகவும், எனவே பண்ருட்டி தொகுதி தவிர்த்து மற்ற தொகுதியே கேளுங்கள் எனக் கூறினாராம். அதற்கு,‘எனக்கு எப்படியாவது வேல்முருகன் தோற்கடிக்கப்பட வேண்டும். அவ்வளவுதான், அதை நீங்களே செவ்வனே செய்தீர்கள் என்றால் மகிழ்ச்சி’ என்று கூற, தெம்போடு வலம் வருகிறார் சத்யா பன்னீர்செல்வம். மொத்தத்தில்,இந்த அளவுக்கு எதிர்ப்பு கூடுவதே,ஒரு வகையில் எங்களுக்கு ‘மாஸ்’தான் என்று மார் தட்டுகின்றனர்தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT