Published : 01 Mar 2021 03:16 AM
Last Updated : 01 Mar 2021 03:16 AM
திண்டிவனம் அருகே தீவனூரில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில், ‘ஐ பேக்’ டீமைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் திமுக நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை ஒன்றை மாட்டி விட்டு . திமுக நிர்வாகிகள் எங்கு அமர வேண்டும். எப்படி அமர வேண்டும் என்று வழி நடத்திக் கொண்டிருந்தனர்.
கருப்பு டீ ஷர்ட், வெளிர் நீல ஜீன்ஸ் அணிந்து, வலம் வந்த அந்த இளையோரிடம், ‘ஐ பேக்’கில் தங்களது பணிதான் என்ன?’ என்று பேச்சு கொடுத்தோம்.
அவர்கள் கூறியது:
மேடைக்கு வரும் ஸ்டாலின் கீழே இறங்கி, முக்கிய நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள், பொது மக்கள் அமர்ந்துள்ள இடங்களுக்குச் சென்று கையுறை அணிந்த கைகளால் மனுக்களை வாங்கிக் கொண்டு மீண்டும் மேடைக்கு வர 15 முதல் 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர். பேச வேண்டியதை குறிப்பாக கொடுத்து விடுகிறோம். அதிகபட்சம் 20 நிமிடங்களில் அவர் பேசி முடிக்க வேண்டும் என்று நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஸ்டாலினிடம் மைக்கில் பேசுவோருக்கு இரு தினங்களுக்கு முன்பே என்ன பேச வேண்டும்?; எப்படி பேச வேண்டும்? என முன்பாகவே பயிற்சி அளிக்கிறோம். நிகழ்ச்சி மேடை முதல் பந்தல் வரை அனைத்துமே எங்கள் குழுவின் கண்காணிப்பில் நடைபெறுகிறது என்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரத்தில் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற திமுக துணை பொதுச் செயலாளர் பொன்முடி, பேசி முடித்த பின்பு, “சரியாக பேசினேனா ?” என்று அருகில் இருந்த‘ஐ பேக்’ பெண் ஊழியரிடம் கேட்டு உறுதி படுத்திக் கொண்டார். விழுப்புரத்தில் நடைபெற்ற திமுகவின் கண்டன ஆர்பாட்டம் மற்றும் கட்சி நிர்வாகிகளுடனான கூட்டத்திலும் அந்த இளம்பெண்ணை காண முடிந்தது.
மொத்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமல்ல, ஒட்டு மொத்த திமுகவினரும் ‘ஐ பேக்’ கண்காணிப்பில் உள்ளது தெளிவாகிறது.
கட்சி மாநாடு, தேர்தல் பரப்புரை, நெருக்கடி தருணங்களில் மாவட்ட நிர்வாகிகளை கட்டமைத்துச் செல்வது என கட்சி சார் பணிகளில் கடந்த காலங்களில் கட்டம் கட்டி கலக்கிய கழக கண்மணிகளை இப்படி கட்டுக்குள் கொண்டு வந்திருப்பது சரியா..! தவறா..! என்பதை காலம் தான் (தேர்தல் முடிவு தான்) முடிவு செய்ய வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT