Published : 01 Mar 2021 03:16 AM
Last Updated : 01 Mar 2021 03:16 AM
ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடத் திட்டமிட்டுள்ள பாஜக, அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அக்கட்சியின் தொகுதிப் பொறுப்பாளரான நடிகை கவுதமி வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக பாஜகவினர் கூறுகின்றனர்.
ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் கடந்த தேர்தல்களில் அதிமுக 5 முறையும், திமுக 3 முறையும், காங்கிரஸ் 2 முறையும், சுயேச்சைகள் 2 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2006-ல் அதிமுக வேட்பாளர் சந்திராவும், 2011-ல் அதிமுக வேட்பாளர் கோபால்சாமியும், 2016-ல் திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியனும் வெற்றி பெற்றனர்.
தற்போது நடைபெற உள்ள தேர்தலில் இந்தத் தொகுதியை அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப பாஜகவினர் ராஜபாளையம் முழுவதும் சுவர் விளம்பரங்களில் வேட்பாளர் பெயரை அறிவிக்காமல் தாமரை சின்னத்தை வரைந்துள்ளனர்.
இத்தொகுதிக்கான பாஜக பொறுப்பாளராக நடிகை கவுதமி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இத்தொகுதியில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதனால் அவருக்குத்தான் இந்த முறை இத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று பாஜகவினர் கூறுகின்றனர். இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கவுதமி நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் ராஜபாளையத்தில் பாஜக தொகுதி பொறுப்பாளராகப் பணியாற்றி வருகிறேன். இங்கு வேட்பாளர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை" என்றார்.
ராஜபாளையம் தொகுதி முழுவதும் தாமரை சின்னம் வரையப்பட்டிருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "மாநில நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படிதான் கட்சிப் பணிகளையும், பிரச்சாரப் பணிகளையும் செய்து வருகிறோம்" என்றார் கவுதமி. அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் பாஜக தனித்து செயல்பட்டு ராஜபாளையம் தொகுதி முழுவதும் தாமரை சின்னம் வரைந்து தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT