Published : 01 Mar 2021 03:16 AM
Last Updated : 01 Mar 2021 03:16 AM
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தென்மாவட்டங்களில் தனது மூன்று நாள் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை நேற்றுமுன்தினம் தூத்துக்குடியில் தொடங்கினார். சுமார் 100 கி.மீ., தொலைவுக்கு சாலையில் பயணித்த அவர், பல்வேறு இடங்களில் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
இடையிடையே பாதுகாப்பு கெடுபிடிகளை உதறித் தள்ளிவிட்டு மக்களிடம் சென்று கைகுலுக்கி செல்ஃபி எடுத்துக்கொண்டார். சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை என்ற இடத்தில் சாலையோர டீக்கடைக்கு சென்று டீ குடித்தார். நாசரேத்தில் பிரசித்தி பெற்ற தூய யோவான் தேவாலயத்துக்கு சென்று வழிபட்டார். 2-ம் நாளான நேற்று திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார். பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவர் சென்ற அனைத்து இடங்களிலும் மக்கள் பெருந்திரளாக திரண்டு நின்றதை காண முடிந்தது.
ராகுல் காந்தியின் இந்த சூறாவளி சுற்றுப்பயணத்தை கடந்த 1989 பேரவைத் தேர்தலின்போது முன்னாள் பிரதமரும், ராகுல் காந்தியின் தந்தையுமான ராஜீவ் காந்தி இப்பகுதியில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தோடு ஒப்பிட்டு பார்க்கின்றனர் காங்கிரஸ் தொண்டர்கள்.
குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ராஜீவ் காந்தியின் சுற்றுப்பயணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தது மட்டுமின்றி, சாலையோரம் இருந்தபல தேவாலயங்கள், கோயில்களுக்கும் சென்றார். அவரே ஜீப்பை ஓட்டிச் சென்றார். அந்த தேர்தலில் தனித்து களம் கண்ட காங்கிரஸ் கட்சி 26 இடங்களில் வென்றது. காங்கிரஸ் தனியாக நின்று கடைசியாக அதிக இடங்களை பிடித்த தேர்தல் அதுதான்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘ராஜீவ் காந்திக்கு பிறகு இவ்வளவு தொலைவுக்கு காரிலேயே பயணித்து மக்களை சந்தித்த ஒரே தலைவர் ராகுல் காந்தி தான்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT