Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM

எங்கள் கூட்டணியில் பல முக்கிய கட்சிகள் இணையவுள்ளன- ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து தகவல்

எங்கள் கூட்டணியில் பல கட்சிகள் இணைய உள்ளன என்று ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசியலில் இன்று நிலவும் தேக்க நிலையை மாற்றவும், லஞ்சம், ஊழல் என்கிற சமூக நோயில் இருந்து மக்களைக் காக்கவும், மாற்றத்துக்கான முதன்மை அணியினைத் தொடங்கி உள்ளோம். இந்த அணியில் தற்போது இந்திய ஜனநாயகக் கட்சியும் (ஐஜேகே), அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியும் இடம்பெற்றுள்ளன. மேலும் பல முக்கிய கட்சிகளும் இந்த அணியில் இடம் பெற உள்ளன என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாஜக தலைமையிலான கூட்டணியில் 2014 நாடாளுமன்றத் தேர்தலையும், 2016 சட்டப்பேரவைத் தேர்தலையும் சந்தித்த ஐஜேகே, திமுக தலைமையிலான கூட்டணியில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, பெரம்பலூர் தொகுதியில் வெற்றியும் பெற்றது.

எம்பி, எம்எல்ஏ பதவிகளை விட தமிழக மக்களின் முன்னேற்றம் என்பதனையே முதன்மையாகக் கருதுவதால், அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி புதிய அணி ஒன்றை உருவாக்கி உள்ளோம். சட்டப்பேரவைத் தேர்தலில் இக் கூட்டணியின் பங்களிப்பு யாரும் எதிர்பாராத வகையில் வலிமையுடன் நிலைபெறும். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், போக்குவரத்து, மருத்துவம், நவீன தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டுவர வேண்டும் என்பதுதான் இந்த அணியின் நோக்கமாகும்.

இந்த நோக்கத்துடன் ஒன்றுபட்டு ஓரணியில் சேர ஆர்வமுள்ள சில முக்கிய கட்சிகளும் இணைந்து, வரும் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க திட்டமிட்டு உள்ளோம். தமிழக மக்கள் தேர்வு செய்ய நல்ல கூட்டணியாகவும், மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றிக் கூட்டணியாகவும் இக்கூட்டணி அமைய உள்ளது. எனவே, ஐஜேகே பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் நம்பிக்கையுடன் இத்தேர்தலில் பணியாற்ற தயாராகும்படி கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x