Last Updated : 27 Feb, 2021 03:16 AM

 

Published : 27 Feb 2021 03:16 AM
Last Updated : 27 Feb 2021 03:16 AM

சுவர் விளம்பரங்களைகூட விட்டுவைக்காத ‘ஐ-பேக்’ குழு: கழுகு பார்வையால் கலக்கத்தில் திமுக நிர்வாகிகள்

சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் உள்ள திமுக, பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரின் ‘இந்திய அரசியல் செயல்பாட்டுக் குழு’ (Indian Political Action Committee- ‘I-PAC’)) என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதையடுத்து திமுகவுக்கான தேர்தல் பணிகளை கடந்த 2020 பிப்ரவரியில் இருந்தே ஐ-பேக் குழு மேற்கொண்டு வருகிறது. எந்த வேலையாக இருந்தாலும், அதில் நிபுணத்துவம் பெற்றவர்களை பயன்படுத்துவதுதான் ஐ-பேக் பாணி.

தமிழகம் முழுவதும் 234 தொகுதியிலும் தங்கள்பணியாட்களை நூற்றுக்கணக்கில் களமிறக்கி திமுகவுக்காக சத்தமில்லாமல் வேலைகளைச் செய்து வருகின்றனர். கிராமம், கிராமமாகச் சென்று சுவர் விளம்பரங்களைக் கூட துல்லியமாகக் கணக்கிட்டு தலைமைக்குத் தகவல் தெரிவிப்பதால் ஐ-பேக் குழுவின் கண்காணிப்பில் இருந்து கிளை நிர்வாகிகள் கூட தப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் ஐ-பேக் குழு வந்ததில் இருந்து திமுகவில் கட்சி நிர்வாகிகள் தலைமைக்கு பொய்க் கணக்கு காட்டிய காலமெல்லாம் மலையேறி விட்டது.

திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழி ஆகியோரது பிரச்சாரப் பயணங்களை ஐ-பேக் குழுவே வடிவமைத்து வருகிறது. அந்தப் பயணங்கள் உங்கள் தொகுதியில் ஸ்டாலின், விடியலை நோக்கி ஸ்டாலின் போன்ற தலைப்புகளில் நடந்து வருகின்றன.

மேலும் பிரச்சாரங்களில் ஒவ்வொரு நாளும் என்ன பேச வேண்டும்? என ஆலோசனை வழங்குவது, தொகுதிப் பிரச்சினைகள் தொடர்பானகுறும்படங்களை வெளியிடுவது போன்றவற்றையும் ஐ-பேக் குழுவே செயல்படுத்தி வருகிறது.

ஐ-பேக் குழு குறித்து திமுக நிர்வாகிகள் பலர் தலைமையிடம் புகார் தெரிவித்தாலும், ஆளும்கட்சிக்கு உளவுத்துறை போன்று திமுகவுக்கு ஐ-பேக் குழு பக்கபலமாக இருந்து வருகிறது.

தலைவர்கள் பிரச்சாரத்துக்குச்செல்லும்போது, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் கிராமம், நகரங்களில் ஐ-பேக் குழுவினர் வீதி, வீதியாகச் சென்று ‘ஸ்டாலின்வரப்போறாரு, விடியல் தரப்போறாரு’ என்ற வாசகம் அடங்கிய பேனர்களைஎத்தனை இடங்களில் வைத்துள்ளனர்.எங்கெல்லாம் தலைவர்களை வரவேற்று சுவர் விளம்பரம் ஒட்டியுள்ளனர் எனக் கணக்கிடுகின்றனர். அதுமட்டுமல்லாது கூட்டம் நடப்பதற்கு முன்பே, எத்தனை கார்களில் எத்தனை பேரை அழைத்து வருகின்றனர் என்பதை மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளிடம் இருந்து பெற்று, அதை துல்லியமாகச் சரிபார்க்கின்றனர். இதனால் ஐ-பேக் குழுவின் கழுகு பார்வையில் இருந்து தப்ப முடியாமல் திமுக நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x