Published : 27 Feb 2021 03:16 AM
Last Updated : 27 Feb 2021 03:16 AM
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. சென்னைக்கு அடுத்து முக்கிய மாவட்டங்களில் ஒன்றான கோவை, கொங்கு மண்டலம், மேற்கு மண்டல மாவட்டங்களின் அறிவிக்கப்படாத தலைமையிடமாக உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளின் முக்கிய மாநில, தேசியத் தலைவர்கள்தங்களது பிரச்சாரங்களில் சென்னைக்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல் கோவைக்கும்முக்கியத்துவம் கொடுத்து பிரச்சாரம் செய்துவருகின்றனர். தலைவர்களின் தொடர் வருகையால் கோவை தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் பிரச்சாரக் கூட்டங்கள் நடக்கும் இடங்களில் கோவைக்கு முக்கிய இடமுண்டு. கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் பேரவைத் தேர்தல் பிரச்சாரங்கள் கோவையில் அதிகபட்சமாக ஒருநாள் மட்டுமே இருந்தது.
பழனிசாமி, ஸ்டாலின்
திமுக சார்பில், கடந்த ஜனவரி மாதம் 2-ம் தேதி கோவை தொண்டாமுத்தூரில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். கிராமசபைக் கூட்டம் என்றாலும், அதிமுக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை பட்டியலிட்டு பேசி, அதை பிரச்சாரக் கூட்டம் போல் மக்களின் பார்வைக்கு மாற்றினார். சமீபத்திய வருடங்களில் கோவையில் முதல்வர்கள் தங்கி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டதில்லை என்ற வழக்கத்தை, கடந்த மாதம் முதல்வர் பழனிசாமி மாற்றினார். கோவையில் தங்கி, கடந்த மாதம் 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை மூன்று நாட்கள் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். வேன் மூலம் 25-க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில், மாவட்டத்தின் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். தொழில்துறையினர் உள்ளிட்ட பலதுறையினரிடம் ஆதரவுக் கூட்டங்களும் நடத்தினார்.
ராகுல்காந்தி
அதேபோல், மாநிலத் தலைவர்களுக்கு போட்டியாக, தேசியக் கட்சியான காங்கிரஸ் சார்பில், அதன் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி கடந்த மாதம் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 5 மாவட்டங்களை மையப்படுத்தி கோவை மேற்கு மண்டலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். கோவையில் விமான நிலைய சந்திப்பு, சின்னியம்பாளையம், கருமத்தம்பட்டி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்த அவர், காளப்பட்டியில் தொழில்துறையினருடன் கலந்தாலோசனைக் கூட்டத்தையும் நடத்தினார். அதன் பின்னர், திமுக சார்பில், கடந்த 19-ம் தேதி கொடிசியா, காரமடை, பொள்ளாச்சி ஆகிய 3 இடங்களில், மாவட்டத்தின் 10 தொகுதிகளையும் , நீலகிரி மாவட்டத்தின் 3 தொகுதிகளையும் மையப்படுத்தி நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார். இதற்கிடையே, கடந்த டிசம்பர் மாதம் திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரும் அடுத்தடுத்து தங்களது கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனும் ‘வேல் யாத்திரை’யை மையப்படுத்தி, சிவானந்தா காலனியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பிரதமர் மோடி
இதைத் தொடர்ந்து, கோவை கொடிசியாவில் நேற்றுமுன்தினம் பாஜக சார்பில் நடந்த, பிரச்சாரக் கூட்டத்தில் , பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். கோவை, மேற்கு மண்டல மாவட்டங்களுக்கு அவரது பேச்சில் முக்கியத்துவம் இருந்தது. ‘‘சிந்தனையாளர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், விஞ்ஞானிகளை உருவாக்கியது கொங்கு மண்’’ என்று தனது பேச்சில் குறிப்பிட்டார். மோடியின் பேச்சுக்கு மக்களிடம் பலத்த வரவேற்பு இருந்ததாகவும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி வாய்ப்புக்கு இக்கூட்டம் முக்கியமானதாக அமைந்துள்ளது எனவும் அக்கட்சியினர் தெரிவித்தனர். அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலா் சீதாராம் யெச்சூரி, திமுக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் அடுத்தடுத்து கோவையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளனர். தேர்தல் நெருக்கத்தில் அதிமுகஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமானஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரின் ‘பொதுக்கூட்டம்’ வடிவிலான பிரச்சாரக் கூட்டங்கள் மீண்டும் கோவையில் நடக்க வாய்ப்புள்ளதாகவும் அந்தக் கட்சிகளின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித் தலைவர்களின் தொடர் வருகையால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதோடு, தொண்டர்களும் உற்சாகமடைந்து தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சூடுபிடிக்கும் தேர்தல் களம்
அரசியல் நோக்கர்கள் சிலர் கூறும்போது,‘‘தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை முக்கிய களமாகும். இதனால் அடுத்தடுத்து தேசிய, மாநில தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் தங்களது பிரச்சாரங்களை கோவையை மையப்படுத்தி மேற்கொள்கின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களது வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய, கோவையை முக்கிய மையமாக பயன்படுத்தி பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. தேர்தல் நெருங்க நெருங்க கோவையில் பிரச்சாரம் மேலும் களைகட்டும்,’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT