Published : 27 Feb 2021 03:16 AM
Last Updated : 27 Feb 2021 03:16 AM
9-ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை இறுதித்தேர்வு ரத்தானதால் பள்ளி மாணவர்கள் முதல்வர் கே.பழனிசாமி படத்தை தங்கள் செல்போன்களில் `புரொபைல்' படமாகவும், ‘வாட்ஸ் அப்’ ஸ்டேட்டஸாகவும் வைத்து மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால், இது ஆசிரியர்கள், பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 9, 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித்தேர்வு ரத்து செய்யப்படுவதாக நேற்று முன்தினம் முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார். மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எப்படி வழங்கப்படும் என்பது தொடர்பான விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
இந்த அறிவிப்பு வெளியானதும் இதுவரை இறுதி ஆண்டுத் தேர்வுக்காக மும்முரமாகத் தயாராகி வந்த 9, 10 மற்றும் பிளஸ் 1 மாணவர்கள் தேர்வு முடிந்ததுபோல் கொண்டாட்ட மனநிலைக்குத் திரும்பியுள்ளனர்.
பள்ளி மாணவர்கள் தேர்வு ரத்தான மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக தங்கள் செல்போன்களில் `புரொபைல்' படமாக முதல்வர் கே.பழனிசாமி படத்தை வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், ‘வாட்ஸ் அப்’ ஸ்டேட்டஸிலும் முதல்வர் படத்தை வைத்து வீடியோவும் வைத்துள்ளனர். மாணவர்களின் இந்த மனநிலையைப் பார்த்து ஆசிரியர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதேநேரத்தில் தேர்வுக்காகப் படித்துத் தயாராக இருந்த மாணவ, மாணவிகள் தேர்வு ரத்தால் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காமல் பிளஸ் 1 வகுப்புகளில் விரும்பும் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்ய முடியாமல் சிக்கல் ஏற்படலாம் என்று அச்சமடைந்துள்ளனர்.
ஏற்கெனவே, கடந்த ஆண்டு இதேபோல் தேர்வு ரத்து, ஊரடங்கில் பள்ளிகளை மூடியது போன்ற முதல்வர் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த மாணவர்கள் சமீப காலமாக அவர் பிரச்சாரத்துக்குச் சென்ற இடங்களில் அவரை வாழ்த்தி முழக்கமிட்டது குறிப்பிடத்தக்கது. தேர்வு ரத்தானலும் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தேர்வுகளே இல்லாதபோது மாணவர்கள் எப்படி பள்ளிக்குச் செல்வார்கள், அவர்களை எப்படி வகுப்பறைகளில் கையாள முடியும் என்று ஆசிரியர்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர்.
இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ‘‘பள்ளிகள் திறந்து மாணவர்கள் ஓரளவு இறுதித் தேர்வுக்குத் தயாராகி வந்தனர். தேர்வு பயத்தால் ஓரளவு படிக்கவும் செய்தனர். தற்போது தேர்வு ரத்தானதால் மாணவர்கள் விடுமுறை விட்டதுபோல் கொண்டாட்ட மனநிலைக்குச் சென்றுவிட்டனர். அவர்களைப் பள்ளிக்கு வரச் சொன்னாலும் வகுப்பறைகளில் வழக்கம்போல் படிப்பது சிரமம். எந்த இலக்கும் இல்லாமல் அவர்களைப் படிக்க வைப்பது கடினம்.
ஏற்கெனவே, கரோனா ஊரடங்கால் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்கூட சரியாக நடத்த முடியாமல் பெரும்பாலான மாணவர்கள் கட்டிட வேலைக்கும், மற்ற கூலி வேலைகளுக்கும் சென்றிருந்தனர். மாணவிகள் பலருக்கு இந்த கரோனா விடுமுறையில் திருமணம் நடந்திருக்கிறது. கட்டிட வேலைக்குச் சென்ற மாணவர்களில் பலரும், திருமணமான மாணவிகளும் பள்ளிக்கு வரவில்லை’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT