Published : 27 Feb 2021 03:16 AM
Last Updated : 27 Feb 2021 03:16 AM
பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வந்து சென்ற பின்னர், புதுச்சேரி தேர்தல் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக பாஜகவினர் மத்தியில் புதியஉத்வேகம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கவுள்ள பொதுக்கூட்டம் நாளை(பிப்.28) காரைக்காலில் நடைபெறுகிறது. இதுவரை இல்லாத வகையில் பிரம்மாண்டமான முறையில் இக்கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற நோக்கில் காரைக்காலில் உள்ள பாஜகவினர் உற்சாகத்துடன் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, இந்தக் கூட்டத்துக்கான மேடை அமைப்பது, தொண்டர்களை திரளாக பங்கேற்கச் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள காரைக்கால் சந்தைத் திடலில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சரும், புதுச்சேரி மாநிலத்துக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளருமான அர்ஜூன் ராம் மேக்வால், புதுச்சேரி மாநில பாஜக பொறுப்பாளரான நிர்மல் குமார் சுரானா, மாநிலங்களவை உறுப்பினரும், தேர்தல் இணை பொறுப்பாளருமான ராஜிவ் சந்திரசேகர், பாஜக புதுச்சேரி மாநிலத் தலைவர் வி.சாமிநாதன், அண்மையில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஏ.நமச்சிவாயம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், முந்தைய நாராயணசாமி தலைமையிலான அரசின் செயல்பாடுகளை விமர்சித்து, கிண்டலடித்துப் பேசினார். அவர்பேசியபோது, “நல்ல ஆட்சி நிர்வாகத்தை மோசமான ஆட்சி நிர்வாகமாக நாராயணசாமி மாற்றிவிட்டார்” என்று கூறியதுடன், “மக்களிடம் பட்டா இருக்கு, ஆனா நிலம் இல்லை. சாலையில் ஹைமாஸ் லைட் இருக்கு, ஆனா வெளிச்சம் இல்லை. மருத்துவமனை இருக்கு, ஆனா டாக்டர் இல்லை. ஆம்புலன்ஸ் இருக்கு, ஆனா டிரைவர் இல்லை. ரோடு இருக்கு, ஆனா பராமரிப்பு இல்லை…” என நீளமாக பட்டியலிட்டார். மேலும், “இந்நிலையை மாற்றுவதற்கான சூழல் தற்போது அமைந்துள்ளது. அவர்கள் உங்களை நாடி வரும்போது நீங்களும், ‘தேர்தல் இருக்கு, ஆனால் ஓட்டு இல்லை’ என்று கூற வேண்டும்’’ என்றார்.
முன்னாள் அமைச்சர் ஏ.நமச்சிவாயம் பேசியபோது, “காரைக்காலில் ஒரு அதிர்வலையை உருவாக்க அமித்ஷா வரவுள்ளார்.மிக முக்கிய அரசியல் தலைவர்கள் காரைக்காலில் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளனர். அதன் மூலமாக, புதுச்சேரி மாநில அரசியலில் அதிர்வலையை உருவாக்கும் தினமாக பிப்.28-ம் தேதி இருக்கும். புதுச்சேரி மாநிலத்தில் பாஜக நம்பர்-1 கட்சி என்ற நிலையை உருவாக்க பாடுபட வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT