Published : 26 Feb 2021 03:14 AM
Last Updated : 26 Feb 2021 03:14 AM
சென்னை தியாகராயநகரில் உள்ள தனது இல்லத்தில் சசிகலா வசித்து வருகிறார். அவரை சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் நேரில் சந்தித்து பேசினார்.
இந்நிலையில், சென்னை தியாகராயநகரில் உள்ள இல்லத்தில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவன தலைவர் உ.தனியரசு எம்எல்ஏ சசிகலாவை நேற்று மாலை 5 மணியளவில் நேரில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பு 5.30 மணி வரை நீடித்தது.
சந்திப்புக்கு பிறகு தனியரசு எம்எல்ஏ செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
சசிகலாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவர் முன்பிருந்ததை போன்று நம்பிக்கையுடன் இருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்நாட்டிலேயே ஜெயலலிதாவும், சசிகலாவும் தான் அரசியலில் அதிக நெருக்கடியை சந்தித்துள்ளனர். பெண் என்ற இடத்தில் இருந்து துன்பத்தை சந்தித்தும் மன தளராமல் சசிகலா இருப்பது வியப்பாக உள்ளது.
ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்க அதிமுக, அமமுக இணைய வேண்டும். அவ்வாறு இணைந்தால் சட்டப்பேரவை தேர்தலில் கூடுதல் வலிமை தரும் என்று தோழமை கட்சி என்ற அடிப்படையில் எனது விருப்பத்தை தெரிவித்தேன். சசிகலாவும் அந்த விருப்பத்தில் தான் உள்ளார். அந்த நோக்கத்தை நிறைவேற்ற ஒரு அணிலாக என்னால் முடிந்த முயற்சிகளை முன்னெடுப்பேன் என்று தெரிவித்துள்ளேன்.
அதிமுக, அமமுகவை நான் இரு பிரிவுகளாக பார்க்கவில்லை. அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாகத் தான் பார்க்கிறேன். அந்த குடும்ப முரண் சரி செய்யப்படும். அதிமுக, அமமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி, தொகுதி உடன்பாட்டினை முடிவு செய்யவில்லை. அந்த சூழலில் தான் அதிமுக, அமமுக இணைய வாய்ப்புள்ளதாக கருதுகிறேன்.
அது சாத்தியப்படாத சூழலில் தேர்தல் நேரத்தில் கட்சியின் நிர்வாகிகளுடன் கலந்து பேசி நல்ல முடிவை எடுப்பேன். விரைவில் தமிழ்நாடு கொங்கு நாடு இளைஞர் பேரவையின் தேர்தல் கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டினை அறிவிப்பேன். அதிமுக, அமமுக இணைந்தால் யார் தலைமை ஏற்பது என்பது அவர்களுடைய உட்கட்சி விவகாரம். அதில் கருத்து கூற முடியாது. நெருக்கடியான சூழலில் ஆட்சி பொறுப்பை ஏற்ற முதல்வர் பழனிசாமி, சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பாஜகவுடனான நெருக்கம் தான் அதிமுகவின் நற்பெயரை கெடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல், திரைப்பட நடிகர் பிரபு, இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்டோரும் சசிகலாவை நேரில் சந்தித்து பேசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT