Published : 25 Feb 2021 03:14 AM
Last Updated : 25 Feb 2021 03:14 AM
சென்னையில் நடைபெறும் புத்தகக் காட்சியில்மய்யம் பதிப்பகத்துக்கு அரங்கம் ஒதுக்கியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் புத்தகக் காட்சி ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். கரோனா வைரஸ் பரவல் காரணமாக நடப்பாண்டு புத்தகக் காட்சி தள்ளி வைக்கப்பட்டது. இந்தநிலையில், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று புத்தகக் காட்சி தொடங்கியது. இதில் 700-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கமல்ஹாசன் நடத்தி வந்த மய்யம் பதிப்பகத்தின் சார்பாக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த சூழலில், புத்தகக் காட்சியில் மய்யம்பதிப்பகத்துக்கு அரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அரங்கில் கமல்ஹாசன் பரிந்துரைக்கும் நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், அரங்கில் கமல்ஹாசனின் நற்பணி இயக்கமும், மக்கள் நீதி மய்யமும் செய்த பணிகளின் புகைப்படங்களின் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.
இதுமட்டுமின்றி, மக்கள் நீதி மய்யத்தின் செயல்பாடுகளை விளக்குவதற்காக அரங்கில் தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை புத்தகக் காட்சிக்கு வழக்கமாக லட்சக்கணக்கானோர் வருவது வழக்கம்.
இவ்வாறு இருக்க அரசியலுக்கு அப்பாற்பட்டு வாசிப்பை மையப்படுத்தி நடந்து வந்த புத்தகக் காட்சி தேர்தலுக்காக பிரச்சாரம் செய்யும் மேடையாக பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் மத்தியில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: மய்யம் பதிப்பகத்தை கமல்ஹாசன் 10 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறார். எனவே, அந்த பதிப்பகத்தின் அரங்கம் தான் அமைக்கப்பட்டுள்ளது. மய்யம் பதிப்பகம் தற்போது தான் முதன்முறையாக வருகிறது. ஆனால், பிற கட்சிகளை சார்ந்த பதிப்பகங்கள் பல ஆண்டுளாக இயங்கி வருகிறது.
எனவே, கேள்வி எழுப்ப வேண்டும் என்றால் அனைத்து அரசியல் கட்சிகளை சார்ந்த பதிப்பகங்களின் மீதும் கேள்வி எழுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT