Published : 25 Feb 2021 03:14 AM
Last Updated : 25 Feb 2021 03:14 AM
மக்கள் நீதி மய்யம் சார்பில் தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்கள் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட விரும்புபவர்களுக்கு சென்னையில் கடந்த 21-ம் தேதி நடைபெற்ற கட்சியின் 4-ம் ஆண்டு தொடக்க விழாவில் கமல்ஹாசன் விருப்ப மனுக்கள் விநியோகம் செய்து தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து, தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ.25 ஆயிரம் கட்டணமாக செலுத்தி விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர். இருப்பினும், கடந்த 3 நாட்களாக விருப்ப மனுக்களை கட்சியினர் எதிர்பார்த்த அளவு பெற்று செல்லவில்லை. சுமார் 200 விருப்ப மனுக்கள் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, கட்சியினரை உற்சாகப்படுத்தும் விதமாக நேற்று முதல் 3 நாட்களுக்கு தினமும் காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை விருப்ப மனுக்களை வாங்க வருபவர்களுக்கு கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விநியோகம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டது.
இதன் படி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று பகல் 12 மணியளவில் கட்சியினருக்கு கமல்ஹாசன் விருப்ப மனுக்களை விநியோகம் செய்தார். இன்று மற்றும் நாளையும் விருப்ப மனுக்களை வாங்க வரும் கட்சியினருக்கு கமல்ஹாசன் விநியோகம் செய்ய உள்ளார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் சிலர் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT