Published : 25 Feb 2021 03:14 AM
Last Updated : 25 Feb 2021 03:14 AM
தமிழகத்தில் இந்தி மற்றும் சம்ஸ்கிருதத்தை திணிக்க பாஜக முயன்று வருவதாக, அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் இதே குற்றச்சாட்டு தற்போது முன்மொழியப்பட்டு வருகிறது.
அண்மையில் சேலத்தில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “புதியகல்விக் கொள்கை மூலமாக இந்திமற்றும் சம்ஸ்கிருதத்தை திணிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது” என்றார்.
இந்நிலையில், தமிழக பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் பாஜக அகில இந்திய தலைவர்கள் பலரும் தங்கள் மேடைப் பேச்சுகளில் தமிழை உயர்த்திப் பிடிக்கத் தொடங்கியுள்ளனர். சென்னையில் அண்மையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, ‘வரப்புயர நீர் உயரும்...’ என அவ்வையாரின் பாடலை முழுவதுமாக கூறினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன், தனது பட்ஜெட் உரையில் திருக்குறள், குறுந்தொகை பாடல்களை மேற்கோள் காட்டினார்.
அண்மையில் சேலத்தில் நடைபெற்ற பாஜக இளைஞர் அணி மாநில மாநாட்டில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தனது உரையில் தமிழை புகழ்ந்து தள்ளினார். “மொழிகளில் மூத்தது தமிழ். பாரம்பரியம் கொண்ட தமிழ் அனைத்து மொழிகளுக்கும் ‘அம்மா மொழி” என்றார்.
மேலும், “ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் ஆகிய வலிமையான அரசர்கள் ஆட்சி புரிந்த நாட்டில் ராணுவத் துறை அமைச்சராக இருப்பது பெருமை அளிக்கிறது” என்றார். இன்னும் ஒருபடி மேலாக, “மோடி அரசின் நிர்வாகத்தில் திருக்குறளின் கருத்துகள் பயன்படுத்தப்படுகின்றன” என்றார்.
ராஜ்நாத் சிங்குக்கு முன்னதாக பேசிய தமிழக தலைவர்கள் பலரும் ‘பாரத் மாதா கி ஜே’ என்பதை முழக்கமாக எழுப்பியதுடன், பாஜக தலைவர்களை மரியாதைக்காக பெயருடன் ஜி சேர்த்து குறிப்பிட்டனர். ஆனால், ராஜ்நாத் சிங் பேசும்போது, தமிழர்களின் பாரம்பரியப்படி பெயருக்கு முன்னர் திரு என மரியாதைக்குரிய வார்த்தையை பயன்படுத்தினார்.
மேலும், பாஜகவின் ‘பாரத் மாதாகி ஜே’ என்ற வழக்கமான முழக்கத்துடன், ‘வெற்றிவேல்...வீரவேல்..’ என 3 முறை முழக்கமிட்டார். இப்போது, தமிழகத்துக்கான தமிழ் முழக்கமாக ‘வெற்றிவேல்... வீரவேல்’ என்பது பாஜகவால் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது.
வடமாநிலத் தலைவர்கள் கூட, தமிழகத்துக்கென தனி தமிழ் அடையாளங்களை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால், இங்குள்ள பாஜக தலைவர்கள் இன்னமும் ஜி..ஜி..என அழைப்பதாக பாஜக தொண்டர்களே அங்கலாய்த்துக் கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT