Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

முதல்வர் பழனிசாமி மீது மக்களுக்கு வெறுப்பு இல்லை; அதிமுக ஆட்சி மீதே வெறுப்பு: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன் சிறப்புப் பேட்டி

தமிழகத்தில் 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியின் மீதே மக்களுக்கு வெறுப்பு இருக்கிறதே தவிர, தமிழக முதல்வர் பழனிசாமி மீது மக்களுக்கு தனிப்பட்ட வெறுப்பு இருப்பதாக தெரியவில்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர்மொய்தீன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

திமுகவில் கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும்?

திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். திமுக சார்பில் பேச்சுவார்த்தைக் குழு அமைத்த பிறகே, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கும்.

வரும் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எத்தனை இடங்களில் போட்டியிடுகிறது?

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட்டோம். வரும் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையின் போது 8 தொகுதிகள் வரையில் கேட்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். ஏன் என்றால், திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்ற நிலை இருக்கிறது. அப்படி, 8 தொகுதிகள் கிடைக்கும் பட்சத்தில் நாங்கள் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், கேரளாவைப் போல்,தமிழகத்திலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறுவோம். இந்த விருப்பத்தை திமுகவிடம் தெரிவிப்போம். எங்களுக்கு உரிய மரியாதையை அளிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.

விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகளை வழங்க வேண்டுமென்ற இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்?

நாட்டில் முதலில் ஜனநாயகத்தை வலுவாக வேரூன்றிய பிறகு, மதம், ஜாதிய முறைகளை ஒழிக்க வேண்டும். அதன்பிறகு, விகிதாச்சார அடிப்படையிலான முறையை அமல்படுத்த வேண்டும். அப்போது தான் நன்மை பயக்கும்.

மத்திய பாஜக அரசு செயல்பாடுகள் குறித்து உங்களது கருத்து என்ன?

நாட்டில் 70 ஆண்டுகளாக இருந்து வந்த, பின்பற்றி வந்த கொள்கைகள் மாற்றப்படுகிறது அல்லது நீக்கப்படுகிறது. நாட்டில் மொத்தம் 4,694 வகுப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு வகுப்பு மக்களுக்கென மொழி, கலாச்சாரம், பழக்க வழக்கம் என பல்வேறு வேறுபாடு இருக்கிறது. ஏராளமான மக்கள் உள்ள நம் நாட்டில் பாரம்பரிய முறைகளை மத்திய அரசு மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய அரசியல் சாசனம், உறுதிமொழிகளை மத்திய அரசு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. நாட்டின் சமூக நல்லிணக்க கொள்கையை சிதைத்து வருகிறது.

பொதுத்துறை நிறுவனங்களில் தனியார்மயமாக்கல் அதிகரித்து வருகிறதே?

நாட்டின் முதல் பிரதமராக நேரு இருந்தபோது, புதிய சித்தாந்த கொள்கையை வகுத்து, நாட்டின் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல அரசு மற்றும் தனியார் இணைந்து செயல்படும் கலப்பு பொருளாதார கொள்கையை உருவாக்கி செயல்படுத்தினார். அதன் அடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்கள் வளர்ச்சியடைந்து, நாட்டின் பெரிய சொத்துகளாக உருவெடுத்தன. ஆனால், தற்போது இந்த கலப்பு பொருளாதார கொள்கையை மாற்றி, தனியாருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதனால், வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பதோடு, நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விடும்.

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்களின் ஆதரவு அதிகரித்து வருவதாக பாஜக நிர்வாகிகள் கூறுகிறார்களே?

சிலர் வேண்டுமென்றால் அவர்களின் தனிப்பட்ட விருப்பமாக பாஜகவை ஆதரித்து வரலாம். இஸ்லாமியர்கள் அனைவருமே பாஜகவை எதிர்க்க வேண்டுமென நாங்கள் கூறவில்லையே, நாட்டின் பாரம்பரிய கொள்கைகளையும், மதச் சார்பின்மை கொள்கையையும் பாஜக முழுவதுமாக பின்பற்றினால், நாங்களும் ஆதரிப்போம் என தெரிவிக்கிறோம். மதநல்லிணக்கம் என்ற நாட்டின் உயிர்நாடியை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். அவர்களின் கொள்கையில் குழப்பம் இருப்பதையே நாங்கள் சுட்டிக்காட்டி வருகிறோம்.

வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியில் மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. அரசியலில் நல்ல மாற்றம் வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே, வரும் தேர்தலில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

தமிழக முதல்வர் பழனிசாமியின் ஆட்சியை எப்படி பார்க்கிறீர்கள்?

அரசியலுக்கு அவர் பழையவராக இருந்தாலும், அரசின் நிர்வாகத்துக்கு புதியவராக தான் பார்க்கிறேன். எல்லா நன்மைகளையும் செய்ய முயற்சித்து வருகிறார். அவர் மீது தனிப்பட்ட வெறுப்பு மக்களிடம் இல்லை என கருதுகிறோம். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்துக் கூறும் நல்ல திட்டங்களையும் முதல்வர் ஏற்று, செயல்படுத்தி வருகிறார். இருப்பினும், அதிமுக ஆட்சி மேல் இருக்கும் குறைகள் இருப்பதால் அதை மக்கள் வெறுக்கின்றனர். அதனால்தான் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x