Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM
பாஜக-அதிமுக கூட்டணியை மக்கள் விரும்புகின்றனர் என சேலத்தில் நடந்த பாஜக மாநில இளைஞரணி மாநாட்டில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
தமிழக பாஜக இளைஞரணி சார்பில் மாநில மாநாடு சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நேற்று நடந்தது. தமிழக சட்டப்பேரவை கட்டிட வடிவிலான மேடை அமைக்கப்பட்டிருந்தது. மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் தலைமை வகித்தார்.
இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா, பாஜக மாநிலத் தலைவர் முருகன், துணைத் தலைவர்கள் துரைசாமி, அண்ணாமலை, முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, பொதுச் செயலாளர்கள் ராகவன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
கரோனா தொற்று காலத்திலும் மோடி அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. கிராமப்புற பொருளாதார முன்னேற்றம், சாலைகள், வீடுகள் தோறும் கழிவறைகள், விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக மாற்றும் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
சேலம்- சென்னை 8 வழிச்சாலை உள்ளிட்ட பல திட்டங்களை, தமிழகத்துக்கு வழங்கியுள்ளோம். ஆயுத உற்பத்திக்காக 2 பாதுகாப்பு வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டன. அதில் ஒன்று எனது மாநிலமான உத்தரப் பிரதேசத்துக்கு ஒதுக்கப்பட்டது. மற்றொன்று தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், ரூ.1,246 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது. புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. மேலும் 3 கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் சென்றவர் வாஜ்பாய்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, “மத்திய அரசு மக்களுக்காக 100 பைசாவைக் கொடுத்தால், அதில் 13 பைசா மட்டுமே மக்களுக்கு சென்றடைகிறது” என்று கூறினார். அவரால் நிர்வாகத்தை சரிவர செய்ய முடியவில்லை. ஆனால், பிரதமர் மோடி, மக்களுக்காக ஒதுக்கப்பட்ட 100 பைசாவையும் மக்களுக்கே கிடைக்கச் செய்தார். டிஜிட்டல் நிர்வாகத்தால் இது சாத்தியமாக்கப்பட்டது. ஊழலும் குறைக்கப்பட்டது.
பிரதமர் மோடி ஆட்சியின்போது, இலங்கை சிறையில் இருந்த 1,600 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். கைது செய்யப்படுபவர்களும் உடனுக்குடன் விடுவிக்கப்படுகின்றனர். இலங்கையின் பிடியில் இருந்த 300 படகுகள் விடுவிக்கப்பட்டன. யாழ்பாணத்துக்கு சென்ற முதல் பிரதமர் மோடி மட்டுமே. அங்குள்ள தமிழர்களுக்கு 27 ஆயிரம் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.
எல்லைப் பிரச்சினையில் சீனாவுடன் 9 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, எல்லையில் இருந்து பின்வாங்க சீனா ஒப்புக் கொண்டது. ஆனால், ராணுவத்தினர் தியாகத்தை காங்கிரஸ் அவமரியாதை செய்கிறது.
காங்கிரஸ்- திமுக கூட்டணி விநோதமானது. பாஜகவின் வேல் யாத்திரையானது, காங்கிரஸ்- திமுக கூட்டணியை ஆட்டம் காணச் செய்துள்ளது. தாமரை- இரட்டை இலை கூட்டணியை மக்கள் விரும்புகின்றனர். 1998-ம் ஆண்டில் பாஜகவுடன் முதல்முதலில் கூட்டணி அமைத்தவர் ஜெயலலிதா. இவ்வாறு அவர் பேசினார்.
“அனைத்து மொழிகளுக்கும் அம்மா தமிழ் மொழி”
சேலம் மாநாட்டில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் “சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம், வெற்றி வேல் வீர வேல்” என்று தமிழில் பேச்சை தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசும்போது, “ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் போன்ற வலிமை வாய்ந்த அரசர்களால் ஆளப்பட்ட, வலிமையான நாட்டின் ராணுவத் துறை அமைச்சராக இருப்பதில் பெருமை அடைகிறேன். மிகவும் புனிதமான தமிழகத்தில், தொன்மை வாய்ந்த, அழகான, அனைத்து மொழிகளுக்கும் அம்மாவாக இருப்பது தமிழ் மொழி.
மகாத்மா வள்ளுவர் எழுதிய திறக்குறள் ஒரு வழிகாட்டி நூல். அது பிரதமர் மோடியின் திட்டங்களுக்கும், நிர்வாகத்துக்கும் வழிகாட்டியாக இருக்கிறது. திருக்குறளின் அறிவார்ந்த கருத்துகள் உலகம் முழுவதும் கொண்டு செல்லப்பட வேண்டும். உங்களுடன் அழகான தமிழில் பேச விரும்புகிறேன். ஆனால், தமிழில் பேசத் தெரியாததற்காக வருந்துகிறேன். மாம்பழம், இரும்பு, மரவள்ளிக் கிழங்கு போன்றவற்றுக்கு புகழ்பெற்ற சேலம், இப்போது மோடி இட்லிக்கும் புகழ் பெற்றுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT