Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM
மக்கள் நீதி மய்யம் தலைமையில் 3-வது அணி அமையும் என்று கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நான்காம் ஆண்டு தொடக்க விழா சென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில், தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்கள் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல்களில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்ப மனு விநியோகம் செய்வதை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.
பின்னர், கமல்ஹாசன் பேசியதாவது: என் மொழி என் அடையாளம், என் முகம். அதை அழிக்க நினைப்பவன் நல்லவனாக இருக்க முடியாது. எனக்கு நண்பனாகவோ சொந்தகாரனாகவோ ஆக முடியாது. மொழி, கலை இரண்டும் எனக்கு பிடிக்கும். அதற்காக போராடுவது எனது கடமை.
பிரதமரை சந்திக்க 7 முறை கடிதம் எழுதிஉள்ளேன். மக்கள் சந்திக்கும் பிரச்சிசனைகளை எடுத்துரைக்க நேரம் கேட்டும் கிடைக்கவில்லை. பசுமாட்டுக்கு கொடுக்கும் மரியாதையை கூட தமிழர்களுக்கு கொடுப்பதில்லை.
பெட்ரோல், டீசல் விலை உயர்வதால் எங்களுடைய வயிறு பற்றி எரிகிறது. நான்சொல்வதை முதல்வர் பழனிசாமி அறிவிக்கிறார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். அப்படி என்றால் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்பது உள்ளிட்ட நல்லவற்றை சொல்ல வேண்டியதுதானே.
அதிமுக, திமுகவுக்கு மாற்றாகத்தான்மக்கள் நீதி மய்யம் வந்துள்ளது. கட்சி என்பது குடும்பம் மாதிரி, அது பெரிதானால் தான் வெற்றியும் பெரிதாக இருக்கும். அரசியலில் ஒரு போதும் சோர்ந்து போக மாட்டேன்.
ஆரோக்கியமாக இருக்கும் போதே மக்கள் பணியாற்ற விரும்புகிறேன். சக்கர நாற்காலியில் வந்து யாரையும் தொந்தரவு செய்ய மாட்டேன். அரசியலில் வந்ததால் ஏற்பட்ட வருமான இழப்பை ஈடுக்கட்டவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கட்சியின் துணை தலைவர் மகேந்திரன், பொது செயலாளர் சந்தோஷ் பாபு, மாநில இளைஞரணி செயலாளர் சிநேகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:
நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தபோது என்ன பேசினீர்கள்?
2 நண்பர்கள் சந்திக்கும்போது என்ன பேசுவார்களோ, அதைத்தான் பேசினோம். நாங்கள் அரசியல் பேசவில்லை. ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டோம்.
உங்களுடன் பணியாற்ற ரஜினிகாந்தை அழைப்பீர்களா?
அவர்தான் உடல்நிலை சரியில்லை என்று சொல்லிவிட்டாரே, அப்புறம் எப்படிகூப்பிட முடியும். அது ஒரு நல்ல நண்பனுக்கு நல்ல அடையாளமாக இருக்காது.
ரஜினிகாந்த் அரசியலை இப்போதும் கவனித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறதே?
அரசியலை கவனிப்பது எல்லோருடைய கடமை. கவனிக்காமல் விட்டதால்தான் இந்தஅவலநிலைக்கு ஆளாகி இருக்கிறோம். நான் அரசியலுக்கு வராமல் இருந்தபோது கூட, 40 ஆண்டுகளாக அரசியலை கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். எப்படிகவனிக்கணுமோ, அப்படி கவனிக்கவில்லை. அதுதான் தவறு.
மக்கள் நீதி மய்யம் தலைமையில் 3-வது அணி அமையுமா?
அமையும் என்று தோன்றுகிறது. அதற்கான மேகங்கள் கூடி வருவதாக தெரிகிறது. விரைவில் மழை பெய்யும்.
திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி சேர உங்களுக்கு அழைப்பு வந்ததா?
அழைப்பு முதலில் வந்தது. எல்லோரும், எல்லோருக்கிட்டயேயும் பேசிக்கிட்டு இருந்தார்கள். ஆனால் என்னிடம் யாரும் நேரடியாக வந்து பேசவில்லை. எனக்கு அதுதான் கணக்கு. தூதுவிடுவது எல்லாம் எனக்கு கணக்கு கிடையாது.
‘சக்கர நாற்காலியில் உட்கார்ந்து மக்களை சந்திக்க வர மாட்டேன்' என்று நீங்கள் பேசி இருக்கிறீர்கள். நீங்கள் முதுமையை கேலி செய்வது போன்று உள்ளதே?
முதுமை எல்லோருக்கும் வருவது. அதை யாரும் கேலி செய்ய முடியாது. ஆனால்அந்த வயதில் ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் என்னுடைய கணிப்பு.
ஏற்கெனவே சக்கர நாற்காலியில் இருந்த ஒருவரை விமர்சிப்பது போன்று இருக்கிறதே?
அவர் மீது எனக்கு நிறைய மரியாதை உண்டு. நான் என்னுடைய சக்கர நாற்காலியையும், என்னுடைய முதுமையையும் பற்றித்தான் பேசினேன்.
மக்கள் நீதி மய்யத்தின் மாநாட்டுக்கு அகில இந்திய தலைவர்கள் யாராவது வருகிறார்களா?
அப்படி அழைக்க வேண்டும் என்றால் நிறையபேரை நான் கூப்பிட வேண்டும். உதாரணத்துக்கு பினராய் விஜயன், மம்தா பானர்ஜி, பட்நாயக், அரவிந்த் கேஜ்ரிவால் போன்றோர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் என் நலன் விரும்பிகள் அவர்களை எல்லாம் கூப்பிட வேண்டும். அவர்கள் ஆரோக்கியம் மற்றும் கரோனா காலத்தையும் மனதில் கொண்டும், அனைவரும் முதல்வர்களாக இருந்து கொண்டிருப்பதாலும் அவர்களை அழைக்கவில்லை.
எம்.ஜி.ஆர். ஆட்சியை நீங்கள் கொடுக்கப்போகிறீர்களா?
என்னை பொறுத்தவரையில் அவரிடம் இருக்கும் நல்லவற்றை நான் எடுத்துக் கொள்வேன். கருணாநிதியிடம் நல்லது இருந்தாலும் நான் எடுத்துக் கொள்வேன். ஏனெனில் நான் அவர்களிடம் கூட்டணி வைக்கவில்லை. அவர்களிடம் இருக்கும் நல்லவற்றை எடுத்துக் கொள்கிறேன். அது என் பெரியப்பா, சித்தப்பாவிடம் இருந்து எடுத்துக் கொள்வது போன்றதுதான்.
1996-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் குரல் கொடுத்தது போன்று ரஜினிகாந்த் இந்த தேர்தலில் உங்களுக்காக குரல் கொடுப்பாரா?
தெரியவில்லை. குரல் கொடுத்தால் அவராகத்தான் கொடுக்க வேண்டும். கூட்டணி என்பது கேட்கலாம், பேசலாம். குரல் கொடுப்பது என்பது தோன்றுகிறவர்களுக்கு எல்லாம் கொடுக்கலாம்.
தி.மு.க. சிறுபான்மையினர் அணியில் இருந்து ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி உதவி அளித்து இருக்கிறார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?
அது தான் அரசியல். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT