Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM
அரசியல் களம் காண்போம் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம்தெரிவித்தார்.
ஊழலை ஒழிக்க அரசியல் களம் காண்போம் என்ற நிகழ்ச்சி சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள ஜேபி பாரடைஸ் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் அரசியலுக்கு வரவேண்டும் என கோரிக்கை வைத்து பேசினர்.
இதையடுத்து நிறைவுரையாற்றி உ.சகாயம் பேசியதாவது:
தமிழக அரசு பணியில் நேர்மையாக பணியாற்றும் போது அவமானப் படுத்தப்பட்டேன். பணியிட மாற்றம் செய்யப்பட்டேன். ஏழைகளுக்கு என்னுடைய அரசுபணியை செய்ய முடியாமல் தடுக்கப்பட்டேன். இந்த அடிப்படையில் தான் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே இளைஞர்களோடு இணைந்து சமூகப் பணியாற்றத் தொடங்கினேன். அரசியல் தாக்கத்தோடு நான் பயணிக்கவில்லை. அரசியல் களம் எளிதானது இல்லை. ஊழல் வாதிகள் அவ்வளவு சாதாரணவாதிகள் அல்ல. நான் எந்த நடிகரையும் நேரில் சந்தித்ததோ அவருக்கு ஆதரவாக இருந்ததோ இல்லை.
நான் எங்கு சென்றாலும் இளைஞர்கள் என்னை அரசியலுக்கு வரவேண்டும் என பல ஆண்டுகளாக அழைகிறார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் லஞ்சம், ஊழலை ஒழித்து, மொழிப்பற்றோடு தமிழக மக்களின் வளர்ச்சிக்காக அரசியல் களம் காண்போம் என்கிற உங்களது கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.
அதேநேரத்தில் காமராஜர், கக்கனை போல் நேர்மையாக இருந்து ஜாதி பாகுபாடு இன்றி தமிழகத்தில் ஊழலை ஒழித்து நேர்மையாக பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக இந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் ஊழல் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT