Last Updated : 21 Feb, 2021 06:45 AM

5  

Published : 21 Feb 2021 06:45 AM
Last Updated : 21 Feb 2021 06:45 AM

அதிமுக கூட்டணியில் கூடுதல் இடங்கள் கேட்டு நிர்பந்திக்க மாட்டோம்: ஜி.கே.வாசன் திட்டவட்டம்

அதிமுக கூட்டணியில் அதிக இடங்களைக் கேட்டு நிர்பந்திக்கமாட்டோம். அதிமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதே நோக்கம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து 'இந்து தமிழ் திசை' நாளிதழுக்கு ஜி.கே.வாசன் அளித்த சிறப்புப் பேட்டி:

நீண்ட இடைவேளைக்குப் பிறகு நாடாளுமன்றத்துக்கு சென்றுள்ளீர்கள். உங்கள் அனுபவம் எப்படி இருக்கிறது?

நாடாளுமன்றத்தில் 2002-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுவரை தொடர்ந்து 12 ஆண்டுகள் பணியாற்றினேன். அதில் 9 ஆண்டுகள் மத்திய அமைச்சராக இருந்தேன். இந்த காலகட்டத்தில் இந்திய மக்களுக்கு, தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வர குரல் கொடுத்திருக்கிறேன். நீண்டகாலமாக நிலுவையில் இருந்த துறைமுகத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கியதும், எண்ணூர் துறைமுகத்துக்கு காமராஜர் பெயரும், தூத்துக்குடி துறைமுகத்துக்கு வ.உ.சிதம்பரனார் பெயரும் சூட்டியதுதான் எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. 6 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அதிமுக, பாஜக கூட்டணியில், அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பேரில் ஒரு பிரதிநிதித்துவம் தமாகாவுக்கு தனித்துவமாக வழங்கப்பட்டது. நாடாளுமன்றம் தற்போது வழக்கமான கோட்பாடுகளுடன்தான் நடைபெற்று வருகிறது. நான் 5 தடவை பேசியுள்ளேன்.

பிரதமர் மோடியுடன் நெருக்கமாக இருக்கும் உங்களுக்கும் அவருக்குமான நட்பு எப்படி உள்ளது?

மோடியைப் பொறுத்தவரை நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு இரண்டையும் உறுதி செய்பவராக இருக்கிறார். நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றவராகவும் உள்ளார். அதனடிப்படையிலேயே மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தமாகாவை நம்பிக்கைக்குரிய, மரியாதைக்குரிய கூட்டணிக் கட்சியாக மோடி கருதுகிறார். அதனடிப்படையில் என்னோடு மரியாதைக்குரிய அன்போடு பழகுகிறார். அதைத்தவிர வேறெதுவும் இல்லை.

தமாகா கட்சி தொடங்கும்போது இருந்த எழுச்சி இப்போது இல்லையே?

தமாகாவில், தொண்டர்கள் சதவீதம் அதிகம். காங்கிரஸில், தலைவர்கள் சதவீதம் அதிகம். சீட் எண்ணிக்கையைக் கொண்டு எந்த முடிவுக்கும் வர முடியாது.தமிழகத்தில் எந்த கட்சி பிளவுபடாமல் இருக்கிறது? எல்லாக் கட்சிகளும் தேர்தல் வியூகம், சந்தர்ப்
பத்துக்கு தகுந்தாற்போல தங்களுக்கு ஏற்றவாறு நிலையை மாற்றிக் கொள்வது அரசியலில் புதிதல்ல. அதற்கு தமாகா விதி விலக்கல்ல. தனிப்பட்ட ஒருவருக்கு பிடிக்காவிட்டால் வேறு கட்சிக்கு செல்வது தொடர்ந்து எல்லா கட்சிகளிலும் நடைபெற்று வருகிறது. அதுதான் ஜனநாயகம்.

தமாகாவுக்கு வாக்கு சதவீதம் எவ்வளவு இருக்கிறது?

எங்கள் கட்சி குக்கிராமம், கிராமங்கள்தோறும் இருக்கிறது. காமராஜர், மூப்பனார் ஆகிய இருபெரும் தலைவர்கள் மக்கள் மனதில் வாழ்கிறார்கள். இப்போதைய இளம் தலைமுறைக்கு தெரியாவிட்டால்கூட, அந்தத் தலைவர்களைப் பற்றி அவர்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சொல்லாமல் இருக்கமாட்டார்கள். அதுதான் எங்களுக்கு பலம். மேலும், நேர்மை, எளிமை, தூய்மை, வெளிப்படைத்தன்மை எங்களிடம் உள்ளது. சீட் எண்ணிக்கை, வாக்கு சதவீதம் என்பதெல்லாம்விட தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் எங்கள் கட்சியினர் உள்ளனர். மக்கள் ஏற்றுக் கொள்ளும்போது வளமான தமிழகம், வலிமையான பாரதத்தை உருவாக்குவோம்.

அதிமுக கூட்டணியில் 12 தொகுதிகளை கேட்பதாகக் கூறப்படுகிறதே?

கூட்டணி தர்மத்தை மதிக்கின்ற கட்சி தமாகா. அதனடிப்படையிலே செயல்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதிமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் வெல்ல வேண்டும். அதற்கு முதலில் அடித்தளம் போட வேண்டும் என்ற எண்ணத்தில் ஜன. 1-ம் தேதியே அதிமுக அறிவித்த முதல்வர் வேட்பாளரை ஏற்றுக் கொண்டது நாங்கள்தான். எண்ணிக்கையைவிட எண்ணம்தான் பெரியதாக இருக்கும். தலைவர் என்ற முறையில் நானும், தொண்டர்களும் நிறைய சீட் வேண்டும் என்று நினைக்கிறோம். அதே குறிக்கோளாக இருந்து கோபமாக மாறினால் கூட்டணியின் வெற்றிக்கு அது பாதகமாக அமைந்துவிடும். நியாயமான கட்சியின் பலம், வெற்றி பெறும் நபர், சூழல், எல்லா கட்சிகளும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துடைய முடிவுகள் என்ற அடிப்படையிலேயே எங்கள் முடிவு இருக்கும்.

அதிமுக கூட்டணி பற்றி என்ன கருதுகிறீர்கள்?

அதிமுக வெற்றிக் கூட்டணியாக இருக்கிறது. 10 ஆண்டுகள் ஆட்சியில், முதல்வரும், துணை முதல்வரும் சாமானியர்களாக, சாதாரண மனிதர்களாக மக்களை சந்தித்து மக்களுக்குத் தேவையான திட்டங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார்கள். குக்கிராமத்தில் உள்ள அடித்தட்டு மக்கள் வரை நலத்திட்டங்கள் சென்று சேர்வதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். மக்களும் ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதனடிப்படையில் மீண்டும் வெற்றி பெறுவதற்கான சூழல் பிரகாசமாக இருக்கிறது.

மதச் சார்பின்மையை மூப்பனார் வலியுறுத்தினார். நீங்கள் பாஜகவுடன் இணக்கமாக இருப்பதை தொண்டர்கள் ஏற்கிறார்களா?

மக்கள் குரலே மகேசன் குரல். மூப்பனார் இறந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் கற்றுத் தந்த எதையும் நாங்கள் மறக்கவில்லை. தியாகம் செய்த அனைத்து தலைவர்கள் மீதும் எங்களுக்கு மரியாதை உண்டு. காங்கிரஸ், பாஜக என எக்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறோம். ஆனால், கட்சி என்றால் மக்களின் மனநிலைக்கு ஏற்றவாறு அவர்களது எண்ணங்களைப் பிரதிபலிப்பதுதான் நல்லது. இந்திய அளவில் மக்கள் பாஜகவை விரும்புகிறார்கள். நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பை உறுதி செய்ய ஏற்ற நபர் மோடி என்றே நினைக்கின்றனர். மக்கள் மனநிலைக்கு ஏற்றவாறு தமாகா தனது நிலையை வெளிப்படுத்தியுள்ளது. எல்லாக் கட்சிகளும் மக்கள் மன நிலைக்கேற்பதான் தங்களது நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர்.

அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதும், மோடி எதிர்ப்பலையால் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது என்று கூறப்படுகிறதே?

தமாகா சிறுபான்மையினருடன் எப்போதும் இணக்கமாக இருக்கும் கட்சியாகும். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள், உரிமைகள், பாதுகாப்பு ஆகியவை கிடைக்க தொடர்ந்து வலியுறுத்துவோம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. மத்திய பாஜக அரசுக்கும் எந்த மாற்றும் கருத்தும் இல்லை. அதைத்தான் மக்கள் பார்ப்பார்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் துரதிருஷ்டமான முடிவை எடுத்தார்கள். மக்கள்தான் இறுதி எஜமானர்கள். நகைக்கடன் தள்ளுபடி என்பது போன்ற பல பொய்களை திரும்பத் திரும்ப சொல்லியதை நம்பி ஒருதலைப்பட்சமாக குறுகிய சிந்தனையோடு வாக்களித்துவிட்டார்கள். அது இந்தத் தேர்தலில் தொடர்வதற்கான வாய்ப்பே இல்லை. மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதால், கரோனா காலத்தில் ஆட்சியாளர்களின் செயல்பாடுகள், பொருளாதார மேம்பாடுக்கான நடவடிக்கைகள், நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றை சிந்தித்து வாக்களிக்கும் நிலையில் இருக்கிறார்கள். அதிமுகவின் திட்டங்கள், சலுகைகள் மக்களை சென்றடைந்திருப்பதால் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதையே மக்கள் விரும்புகிறார்கள். அதிமுக – அமமுக கருத்து வேறுபாடு என்பது அவர்கள் பிரச்சினை. அது பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை.

நீங்கள் இதுவரை ஒரு தேர்தலில்கூட போட்டியிடவில்லையே?

தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை. மாநிலங்களவை உறுப்பினராக இருந்த காலத்தில் எல்லாம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x