Published : 20 Feb 2021 03:16 AM
Last Updated : 20 Feb 2021 03:16 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியரான மருத்துவர் சந்தோஷ்பாபு, விருப்ப ஓய்வு பெற்று மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். தற்போது அக்கட்சியின் தலைமையிடத்து மாநில பொதுச் செயலாளராக உள்ளார். மக்கள் நீதி மய்யம் சார்பில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடுவேன் என சந்தோஷ்பாபு ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
அக்கட்சியின் தலைவர், கமல்ஹாசன் கிருஷ்ணகிரியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, ஏற்கெனவே இங்கு ஆட்சியராக பணிபுரிந்த சந்தோஷ்பாபு, தற்போது மக்கள் ஊழியம் செய்ய வந்துள்ளார் என்று குறிப்பிட்டு பேசினார்.
இதுகுறித்து அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் சிலர் கூறும்போது, ‘‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை ஆட்சியராக சந்தோஷ்பாபு இருந்தபோது, 16 ஆயிரம் குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தார். இவரது பதவிக் காலத்தில்தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராமங்களில் கால் சென்டர், பெண்கள் முன்னேற்றம், சுகாதாரம் மற்றும் கணினி சேவை மையம் உள்ளிட்டவை தொடங்கப்பட்டன.
மாவட்டத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் சந்தோஷ்பாபு நன்கு அறிமுகமானார். இதேபோல் இருளர் இன மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுத்ததன் மூலம் அவர்களது குடியிருப்பு பகுதிக்கு அடையாளமாக அவரது பெயரை சூட்டி உள்ளனர். மாவட்டத்தில் மக்களிடையே நல்ல அறிமுகம் உள்ளதால், சந்தோஷ்பாபு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில், கிருஷ்ணகிரி அல்லது ஓசூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுவார் என தெரிகிறது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT