Published : 19 Feb 2021 03:22 AM
Last Updated : 19 Feb 2021 03:22 AM
தமிழக முதல்வரின் மாவட்டம் என்பதாலும், அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளுக்கு சம பலம் உள்ளதாலும், 11 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பெரிய மாவட்டம் என்பதாலும், சேலம் மாவட்டத்துக்கு கூடுதல் அரசியல் முக்கியத்துவம் கிடைத்துள்ளது.
அதற்கேற்ப, வரும் 21 மற்றும் 22-ம்தேதிகளில் தேசியத் தலைவர்கள் இருவர் மற்றும் மாநிலத் தலைவர்கள் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதால், சேலம் மாவட்ட அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
வரும் 21-ம் தேதி, சேலம் சீலநாயக்கன்பட்டியில், பாஜக மாநில இளைஞர் அணி மாநாடு மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக இளைஞர் அணி அகில இந்திய தலைவர் தேஜஸ்வி சூர்யா மற்றும் மாநில பாஜக தலைவர் முருகன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சிக்காக, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சேலம் வரவுள்ளார்.
இதனிடையே, 22-ம் தேதி சேலத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்கிறார். இதேபோல, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அக்கட்சி சார்பில் சேலத்தில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறார்.
மேலும், அன்று (22-ம் தேதி) சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஆசியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா மருத்துவக் கல்லூரியை முதல்வர் பழனிசாமி திறந்து வைக்கிறார். மேலும், அதிமுக சார்பில் நடத்தப்படும் கட்சி நிகழ்ச்சி ஒன்றிலும் முதல்வர் பங்கேற்க உள்ளார்.
இதேநாளில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டம் மேச்சேரியில், திமுக சார்பில் நடத்தப்படும் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அடுத்தடுத்த 2 நாட்களும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால் சேலம் மாவட்ட அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT