Published : 18 Feb 2021 03:18 AM
Last Updated : 18 Feb 2021 03:18 AM
சட்டப்பேரவைத் தேர்தலை சொந்த நிதியில் இந்திய கம்யூனிஸ்ட் எதிர்கொள்ளும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். வகுப்புவாத சக்திகளை வீழ்த்தவே காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ‘இந்து தமிழ் திசை' நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:
தேர்தல் பரபரப்பில் மதுரையில் மாநாடு நடத்துகிறீர்கள். எதற்காக இந்த மாநாடு?
கடந்த 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு‘இந்தியாவைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்'என்ற முழக்கத்தை முன்வைத்து கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாநாடு நடத்தினோம்.அதுபோல வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், "வகுப்புவாத சக்திகளை தமிழகத்தில் காலூன்ற அனுமதிக்கக் கூடாது. அவர்களுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகளை தோற்கடிக்க வேண்டும்" என்பதற்காக 'தமிழகத்தை மீட்போம்' என்றுமுழக்கத்துடன் மதுரையில் மாநாடு நடத்துகிறோம்.
இந்திய கம்யூனிஸ்ட் பலமாக இருந்த காவிரி டெல்டா மாவட்டங்கள், கோவை, திருப்பூரில் கூட கட்சி வலுவிழந்துள்ளதே?
இந்திய கம்யூனிஸ்ட் வலுவிழந்துவிட்டது என்பது தவறு. கட்சிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்கவில்லை. நாங்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறோம். கரோனா பொதுமுடக்கத்தின்போதுகூட நாங்கள் போராட்டங்களை நடத்தி கொண்டிருந்தோம். வகுப்புவாதத்தை முறியடிக்கும் போரில் நாங்கள் உறுதியுடன் களத்தில் நிற்கிறோம்.
தேர்தல் நெருங்கிவிட்டது. திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சு நடைபெறுகிறதா?
திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு தொடங்கவில்லை. அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் திமுக சார்பில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படும். அதன்பிறகு பேச்சு நடைபெறும். தொகுதிப் பங்கீட்டில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.
இந்திய கம்யூனிஸ்ட் எத்தனை தொகுதியில் போட்டியிடும்? உங்கள் தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளீர்களா?
நாங்கள் ஏற்கெனவே போட்டியிட்ட தொகுதிகள், வென்ற தொகுதிகள், கட்சி அமைப்புகள் வலுவாக உள்ள தொகுதிகள் என்று இந்திய கம்யூனிஸ்ட் பல தொகுதிகளில் வலுவாகவே உள்ளது. மதுரை மாநாடு முடிந்ததும் எங்களுக்கான தொகுதிகளை அடையாளம் கண்டு திமுகவிடம் அளிப்போம். எங்களுக்குரிய தொகுதிகளை சுமுகமான முறையில் பெறுவோம். தேர்தல் அறிக்கை தயாரிப்பு, பிரச்சாரம் என்று தேர்தல் தொடர்பான மற்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.
திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதா?
இப்போதுள்ள திமுக கூட்டணி மிகவும் பலமானது. இதே அணிதான் கடந்த மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உட்பட 39 தொகுதிகளில் வென்றது. புதிய கட்சிகள் இணையுமா என்பதை திமுக தலைமைதான் கூற வேண்டும்.
பாஜக வெற்றிவேல் யாத்திரை நடத்தியபோது திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஆனால், இப்போது ஸ்டாலின், உதயநிதி, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் ‘வேல்' உடன் காட்சி தருகிறார்களே?
‘வீர வாள்' கொடுப்பது போல தொண்டர்கள் ஆர்வமுடன ‘வேல்' கொடுக்கிறார்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதனை தலைவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள். இதனால் கொள்கையை கைவிட்டு விட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை இந்துக்களுக்கு எதிரான கட்சிகள் என்ற தோற்றத்தை ஏற்படுத்த பாஜக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. 1971 பேரவைத் தேர்தலில் இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் நடைபெற்றது. ஆனால், திமுக கூட்டணி அமோக வெற்றிபெற்றது. அதுபோல இப்போது பாஜக பிரச்சாரம் செய்கிறது. 1971 போலவே இப்போதும் திமுக அணியே வெற்றிபெறும்.
பயிர்க் கடன் தள்ளுபடி அதிமுக கூட்டணிக்கு சாதமாக அமையும் என்று கூறப்படுகிறதே?
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் வறட்சியில் பயிர்கள் கருகிய போதும், மழையால் பயிர்கள் அழுகியபோதும் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரியபோதும், போராடிய போதும் அதனை அதிமுக அரசு ஏற்கவில்லை. 2017-ல் ஓபிஎஸ்முதல்வராக இருந்தபோது இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கையை ஏற்று விவசாயிகளின்குறுகிய காலக் கடன்களை, மத்திய காலக்கடன்களாக மாற்றினார்கள். அப்படி மாற்றப்பட்டகடன்கள் இப்போது தள்ளுபடி செய்யப்படவில்லை. இந்தக் கடன் தள்ளுபடியால் ஆளும்கட்சியினரே அதிகமாக பலனடைந்துள்ளனர். தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் ஆதாயம் அடைவதற்காக கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகளும், மக்களும் நன்கறிவார்கள். எனவே, இது அதிமுக கூட்டணிக்கு எதிராகவே அமையும்.
தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப் பட்டுள்ளது. எஸ்.சி. பட்டியலில் இருந்து தங்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளதே?
7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் தங்களுக்கு கிடைத்து வரும் சலுகைகள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் அந்த 7 உட்பிரிவு சமூகங்களிடையே ஏற்பட்டுள்ளது. எஸ்.சி. பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்பதை இந்த சமூகங்களில் பெரும்பாலானோர் விரும்பவில்லை. வாக்கு அரசியலுக்காக அதிமுக,பாஜக அரசுகள் இதனை செய்துள்ளன. இந்த முடிவு எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.
தமிழகம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸுடன் கூட்டணி. ஆனால், கேரளத்தில் காங்கிரஸை எதிர்த்து போட்டி. இப்படி மாநிலத்துக்கு மாநிலம் கூட்டணி வைப்பது சந்தர்ப்பவாதம் என்று விமர்சிக்கப்படுகிறதே?
கேரளத்தில் அரசியல் சூழல் மற்ற மாநிலங்களில் இருந்து வேறாக உள்ளது. அங்கு காங்கிரஸ் தலைமையில் ஓர் அணியும், இடதுசாரி கட்சிகள் தலைமையில் ஓர் அணியும் உள்ளன. எனவே, அங்கு காங்கிரஸை எதிர்க்க வேண்டிய சூழல் உள்ளது. நாட்டின் இன்றைய சூழலில் வகுப்புவாத சக்திகளை வீழ்த்துவது மற்ற அனைத்தையும் விட முக்கியமானது. வகுப்புவாத பாஜகவை வீழ்த்தவே கேரளம் தவிர்த்த மாநிலங்களில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கிறோம். இதுவும் கொள்கைக்காக எடுக்கப்பட்ட முடிவுதான். எனவே, இதனை சந்தர்ப்பவாதம் என்று கூற முடியாது.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் இணைப்பு பற்றி நீண்ட காலம் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இணைப்பு சாத்தியமாகவில்லையே?
கம்யூனிஸ்ட் கட்சிகள் பிளவுபட்டதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைய வேண்டும் என்பதற்காக தொடக்கம் முதலே முயற்சித்து வருகிறோம். இணைப்புக்காக கேரளத்தில் ஆட்சியை இழந்த கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அதற்கான முயற்சிகளை விடமால் செய்து வருகிறோம். காலம் தான் அதனை தீர்மானிக்க வேண்டும்.
கடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவிடம் ரூ.15 கோடி பெற்றது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்தத் தேர்தலில் அதுபோல நிதி பெறும் திட்டம் உள்ளதா?
இப்போது தேர்தல் முறை முற்றிலும் மாறிவிட்டது. நிதி என்பது தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.15 கோடி, மார்க்சிஸ்ட் கட்சிக்கு ரூ.10 கோடியை திமுக அளித்தது. வங்கிகள் மூலமே பணம் பெற்றோம். ரகசியமாகப் பெறவில்லை. திமுக அளித்த அந்த உதவியைப் பயன்படுத்தி, தமிழகம் முழுவதும் அனைத்துத் தொகுதிகளிலும் தேர்தல் பணிகளுக்கு செலவு செய்தோம். இந்த முறை சொந்த நிதியில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக மக்களிடம் நிதி திரட்டி வருகிறோம்.
இந்தத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?
கட்சி என்ன சொல்கிறதோ அதனை செய்வேன். கட்சி விரும்பினால் போட்டியிடுவேன். இவ்வாறு இரா.முத்தரசன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT